பட்டாசுகள் சத்தத்துக்கு பயந்து வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை

 
சிறுத்தை

குன்னூர் குடியிருப்பு பகுதியில் தீபாவளி என்பதால் பட்டாசுகள் சத்தத்தால் பயந்து வீட்டிற்குள் முடங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க போலீசார் போராடிவருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில்  சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள ப்ரூக் லேண்ட்ஸ் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் விமலா என்பவரின் குடியிருப்பிற்குள் நுழைந்தது.  அச்சம் அடைந்த அவர் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மற்றும்  வனத்துறையினர் உள்ளே உள்ளவர்களை அழைத்து வர சென்ற போது சிறுத்தை நான்கு தீயணைப்புத்துறையினரை தாக்கியது.

குடியிருப்பு உரிமையாளர் விமலா, தீயணைப்பு துறையினர் கண்ணன், முரளி, குட்டி கிருஷ்ணன், விஜயகுமார், கிராம நிர்வாக உதவியாளர் சுரேஷ் குமார்,  தனியார் தொலைக்காட்சி நிருபர் திருநாவுக்கரசு ஆகிய ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மறைந்திருந்த சிறுத்தை விரட்டி மீண்டும் தாக்கியது அவர்களையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். மேலும் அந்த வீட்டின் உள்ள சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்‌.  முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் இணை இயக்குநர் அருண் கால் நடை மருத்துவர் ராஜேஷ்  ஆகியோர் தலைமையில் சிறுத்தையை வெளியே கொண்டு வர முயற்சி செய்தனர்.

இரண்டு கூண்டுகள்  கொண்டு வரப்பட்டன. பாதுகாப்பு  உடைகள் அணிந்த வனத்துறையினர் வீட்டிற்குள் நுழைந்தனர்   கதவுகள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டன. கூண்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. தீபாவளி என்பதால் பட்டாசுகள் சத்தம் கேட்டு சிறுத்தை பயந்துள்ளதாகவும் தாமாகவே வெளி வரும் வரை காத்திருத்த வேண்டும் என்றும் பொது மக்கள் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ்  தெரிவித்துள்ளார்.மேலும் அந்த பகுதி சுற்றிலும் பொது மக்கள் அப்புறப்படுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.