சசிகலா இல்லத்தில் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு
சென்னை போயஸ் கார்டனில் சசிகலா வீட்டை, போலீஸ் எனக் கூறிக்கொண்டு வேவு பார்த்த மர்மநபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சசிகலா உதவியாளர் போலீசில் அளித்த புகாரில், “பொதுச்செயலாளர். நான் புரட்சித்தாய் சின்னம்மா திருமதி. வி.கே.சசிகலா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அவர்களின் தனி உதவியாளராக உள்ளேன். மேற்படி புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் முகாம் அலுவலகம் மேற்சொன்ன முகவரியில் உள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக இந்த இடத்திற்கு தொடர்பில்லாத, அடையாளம் தெரியாத. மர்ம நபர் ஒருவர் மேற்கண்ட வீட்டின் முன்பு அவ்வப்போது வந்து நின்றுகொண்டு இருக்கிறார். இருமுறை எங்களது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து எங்கள் காவலாளியிடம் தகராறு செய்துள்ளார். மேலும், இந்த டிப்டாப் ஆசாமி இந்த வழியாக வந்து செல்கின்ற பொதுமக்களையும், வாகனங்களையும் தொடர்ந்து நோட்டமிட்டு கொண்டே இருக்கிறார். இவரிடம் நேரில் சென்று விசாரித்தால் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார் தன்னை ஒரு காவல்துறை அதிகாரி போன்று சித்தரித்து கொண்டு. "போலீசிடம் வேண்டுமென்றால் போய் சொல்லிக்கொள்ளுங்கள், போலீஸ் வந்தால் யாரை அவர்கள் கைது பண்ணுவார்கள் என்று அப்போது உங்களுக்கு தெரியும், உங்கள் வேலையை போய் பாருங்கள்” என்று மிரட்டும் தொனியிலும், அனைவரையும் அச்சுறுத்தும் வகையிலும் பேசுகிறார். இவரது செயல் மிகவும் சதேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. மேலும், இவர் நிற்கும் இடத்திற்கு அருகிலேயே மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இல்ல வாயிலில் 24 மணி நேரமும் காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவர்களும் இவரைப்பற்றி எந்தவித கேள்வியும் எழுப்பாமல் பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
இந்த சந்தேகத்திற்குரிய நபரால் போயஸ் கார்டன் பகுதியில் உள்ள எங்கள் கழக பொதுசெயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திருமதி.வி.கே.சசிகலா அவர்கள் மற்றும் இப்பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள் அனைவரின் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பதாக கருதுகிறேன். எனவே, இந்த நபரை உடனே விசாரித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


