டிராக்டர் ஓட்டி வந்த பள்ளி மாணவன் - முதியவர் துடி துடித்து பலி
ஓசூர் அருகே சாலையோரமாக அமர்ந்திருந்தவர்கள் மீது டிராக்டர் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே ராமர் கோவில் என்னுமிடத்தில் டிராக்டர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், மற்றொருவர் பலத்த காயம் அடைந்துள்ளார். அஞ்செட்டி அருகே உள்ள வண்ணாத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த காளியப்பன்(60), சீங்கோட்டையை சேர்ந்த குமார்(40) ஆகிய இருவர் ராமர் கோவில் என்னும் பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்திருந்தபோது, அதே ஊரை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் 12ம் வகுப்பு படித்து வரும் கணேசன் என்கிற சிறுவன் டிராக்டர் ஓட்டிவந்த போது, சாலையோரம் அமர்ந்திருந்தவர்கள் மீது ஏறியதில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
குமார் என்பவர் பலத்த காயங்களுடன் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளி மாணவன் டிராக்டர் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய சம்பவம் குறித்து அஞ்செட்டி போலிசார் விசாரித்து வருகின்றனர்.


