மனித - விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

 
anbumani ramadoss

மனித - விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும் என்று  பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்தில் யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 152 பேர் யானைகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் மனித, விலங்குகள் மோதல் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

Anbumani Ramadoss

தமிழகத்தில், அதிலும் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள மாவட்டங்களில் மனித ,விலங்குகள் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மனித , விலங்குகள் மோதலுக்கு வனப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு, வனப்பகுதிகளை மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்தல், யானைகள் வலம் வரும் பகுதிகள் மனிதர்களால் அழிக்கப்படுதல் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன. கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட இந்தத் தவறுகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும், அவற்றின் மூலம் இதுவரை எதிர்பார்த்த பயன்கள் கிடைக்கவில்லை, இனி கிடைக்குமா? என்பதும் தெரியவில்லை.

மனித, விலங்குகள் மோதலால் உயிரிழப்புகள் மட்டுமின்றி, பொருள் இழப்புகளும் மிக அதிகமாக ஏற்படுகின்றன. ஜனவரி 17 ஆம் நாள் முதல் பிப்ரவரி 19 வரையிலான 32 நாட்களில் மட்டும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் தாக்கி மூன்று பெண்கள், 2 ஆண்கள் என 5 பேர் இறந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 2019 முதல் 2022 வரையிலான 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் புலிகள் மற்றும் யானைகள் தாக்கி 1700 பேர் உயிரிழந்திருப்பதாகவும், தமிழகத்தில் யானைகள் தாக்குதலில் மட்டும் 152 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

anbumani

மற்றொருபுறம் வன விலங்குகள் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வேளாண் விளைபொருட்கள் சேதமடைந்துள்ளன. விலங்குகள் தாக்குதலில் கொல்லப்படுவோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும், விலங்குகளால் கொல்லப்படும் உயிர்களுக்கும், சேதமடையும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை. சில பகுதிகளில் முதல்கட்ட இழப்பீட்டை மட்டும் வழங்கும் தமிழக அரசு, மீதத் தொகையை வழங்கவில்லை.

வன விலங்குகளால் மக்களும், பயிர்களும் அழிக்கப்பட்ட பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதை விட, வன விலங்குகளால் மனிதர்களும், பயிர்களும் தாக்கப்படுவதை தடுப்பது தான் சிறந்தத் தீர்வாக இருக்கும். யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியே வருவதை உடனடியாக தடுப்பது என்பது உடனடியாக சாத்தியமில்லை.

மாறாக, வனத்தை விட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் வெளியே வருவதை கண்காணித்து, அவற்றை மீண்டும் வனத்திற்குள் அனுப்பி வைப்பது தான் பயனளிக்கும் தீர்வாக இருக்கும். அதற்காக தனிப்படைகள் அமைக்க வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால், ஆக்கப்பூர்வமான இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு இன்னும் சிந்திக்கக் கூட இல்லை என்பது தான் உண்மை.

ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் மனித விலங்கு மோதல் பெரும் சிக்கலாக உருவெடுத்து வருகிறது. அதை சமாளிப்பதற்காக அந்த மாநிலங்களில் ஒவ்வொரு சரகத்திலும் வனச்சரக அலுவலர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்படைகளுக்கு போதிய எண்ணிக்கையில் வனக்காவலர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், வாகனம் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அப்படைகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால் ஆந்திரம், கர்நாடகத்தில் மனித வன விலங்குகள் மோதல் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருக்கின்றன.

anbumani

அதேபோல், இந்த வனச்சரகத்தின் பரப்பளவு குறைக்கப்பட்டு புதிய சரகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உதவி சார் ஆய்வாளர் நிலையிலான வனக்காப்பாளர் 2500 ஹெக்டர் முதல் 5000 ஹெக்டர் வரை பரப்பளவு கொண்ட ஒரு வனக் காவல் சுற்று பகுதியை கண்காணிப்பதும், காவல் ஆய்வாளர் நிலையிலான வனச்சரக அலுவலர் 30,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனச்சரகத்தை கண்காணிப்பதும் சாத்தியமற்றவை. வனக்காவல் சுற்றுப்பகுதியின் பரப்பளவை 1000 ஹெக்டேராகவும், வனச்சரகத்தின் பரப்பளவை 5000 ஹெக்டேராகவும் குறைப்பதன் மூலம் வனப்பகுதிகளை சிறப்பாக நிர்வகிக்க முடியும்.

எனவே, தமிழக வனத்துறையில் வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து காட்டுக்குள் மீண்டும் அனுபுவதற்கான தனிப்படைகளை அமைக்க வேண்டும்; வனப் பகுதிகளின் பரப்பளவை குறைக்க வேண்டும். கோடைக்காலத்தில் வனத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விலங்குகள் ஊர்களுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், எந்தெந்த வனப்பகுதிகளில் எல்லாம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்து அங்கெல்லாம் விலங்குகளுக்கு தற்காலிக தண்ணீர் தொட்டிகளை திறக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம் தமிழகத்தில் மனித விலங்கு மோதல் நிகழாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.