'ஒரே ஊரில் அடுத்தடுத்து இறந்த 6 இளைஞர்கள்!' ஊரே சேர்ந்து நடத்திய வினோத பூஜை!

 
saami saami

ஆண்டிப்பட்டி அருகே மேலப்பட்டி கிராமத்தில் இளைஞர்கள் அடுத்தடுத்து மரணமடைந்ததால் கிராமத்தில்  உள்ள கோவில்களில் கிராமமக்கள் ஒன்று கூடி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டி என்ற கிராமம் கிராமம் உள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் கடந்த மாதம் அடுத்தடுத்து சிலர்  பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மரணங்களால் கிராமமக்கள் பீதி அடைந்தனர்.  இதனைத் தொடர்ந்து மேலப்பட்டி கிராம கமிட்டி சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் படி மேலப்பட்டி கிராமமக்கள் காவல் தெய்வங்களாக வழிபடும் விநாயகர் முத்தாலம்மன் காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மூலம் பரிகாரம் செய்வதென முடிவு செய்யப்பட்டது. இதற்காக மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும் கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்தனர். 

ஆடி வெள்ளி நாளான இன்று  அனைத்து வீடுகளில் இருந்தும் பால் பன்னீர் எடுத்து வரப்பட்டு விநாயகர் முத்தாலம்மன் காளியம்மன் சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த வழிபாட்டின் போது பெண்கள் பலரும் குலவையிட்டும் சாமியாடியும் தெய்வத்தை வழிபட்டனர். அபிஷேகம் செய்யப்பட்ட பால் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு கொண்டுவரப்பட்ட கயிறு மேலப்பட்டி கிராம மக்கள் அனைவரின் கையில் கட்டப்பட்டது. இந்த வழிபாடு மூலம் இனி வரும் நாட்களில் தங்கள் கிராமத்தில் இது போன்ற துயர சம்பவங்கள் எதுவும் நடக்காது என்று நம்பிக்கை தெரிவித்தனர். அடுத்தடுத்து ஏற்பட்ட மரணங்களும், அதற்காக கிராம மக்கள் விரதம் இருந்து பூஜை நடத்திய சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.