நீட் தேர்வு எழுத தருமபுரி சென்டருக்கு செல்ல வேண்டிய மாணவி சேலம் வந்ததால் தவிப்பு
ஹால் டிக்கட்டில் முகவரி இடத்தில் அரசு கலைக்கல்லூரி, சேலம் மெயின் ரோடு என மட்டும் போடப்பட்டிருந்ததால் தர்மபுரி தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டிய மாணவர்கள் சேலம் அரசு கலைக்கல்லூரி தேர்வு மையத்திற்கு நீட் தேர்வு எழுத வந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. இத்தேர்வினை சேலம் மாவட்டத்தில் 22 மையங்களில் 9,731 மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வுக்கான ஹால் டிக்கெட் கடந்த 30ஆம் தேதி ஆன்லைன் மூலம் கிடைக்கப்பெற்றனர். இந்நிலையில் இன்று காலை 10 மணி முதலே , நீட் தேர்வு எழுதக்கூடிய மாணவ மாணவிகள் தங்களது ஹால் டிக்கெட் , ஆதார் அட்டை , மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் அவரவர்களுடைய தேர்வு மையத்திற்கு பெற்றோருடன் வந்தனர். இந்த நிலையில் காலை 11:00 மணி முதல் தேர்வு மையத்திற்கு வந்திருந்த மாணவ , மாணவிகளை நுழைவாயிலேயே தடுப்பு அமைத்து ஆவணங்கள் மற்றும் ஆடை , ஆபரணங்கள் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்த பிறகு உள்ளே அனுமதித்தனர். குறிப்பாக தேர்வர்கள் முழு கை ஆடை , தங்க நகைகள், கம்மல் ,காப்பு , கைகடிகாரம் , கூலிங் கிளாஸ் ஆகியவற்றை அணிந்து வரவ தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சேலம் அரசு கலைக் கல்லூரி தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகளின் சுடிதாரில் பட்டன் வைத்திருந்ததால், அவர்களை மாற்று ஆடை அணிந்து வர வெளியே அனுப்பினர். உடன் வந்த பெற்றோர் மாற்று உடை ஏற்பாடு செய்து தங்கள் குழந்தைகளை அனுப்பி வைத்தனர்.மேலும் மாணவர் ஒருவர் அரைஞான் கயிறு அணிந்து வந்திருந்ததால் அவரையும் அனுமதிக்காததால், அரைஞாண் கயிற்றை அவிழ்த்து பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு தேர்வு மையத்திற்குள் சென்றார்.
இதனிடையே சேலம் அரசு கலைக் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகள் சிலரின் ஹால் டிக்கெட்டில் அரசு கலைக்கல்லூரி சேலம் மெயின் ரோடு , மற்றும் பின்கோடு மட்டும் முகவரி இடத்தில் அச்சிடப்பட்டிருந்ததால் 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சேலம் அரசு கலைக் கல்லூரிக்கு வந்தனர். அப்போது அவனை சரிபார்த்த தேர்வு கண்காணிப்பாளர்கள் , அது தர்மபுரி அரசு கலைக் கல்லூரி தேர்வு மையத்திற்கான ஹால் டிக்கெட் எனக் கூறி அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் அந்த மாணவர்களும் பெற்றோரும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகினர். சில மாணவர்கள் 12 மணிக்கு உள்ளாகவே சேலம் அரசு கலைக் கல்லூரிக்கு வந்ததால் அவர்கள் உடனடியாக தர்மபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மூன்று மாணவர்கள் 12:30 மணி அளவில் சேலம் அரசு கலை கல்லூரிக்கு வந்த போது அவர்களுடைய தேர்வு மையம் தர்மபுரி எனக்கூறியதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர், மேலும் ஒரு மணி நேரத்திற்குள் தர்மபுரி செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இதனால் அந்த மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாத ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

முகவரியில் மாவட்டத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது அரசு கலைக் கல்லூரி சேலம் மெயின் ரோடு என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே இனி தேர்வு மையத்திற்கான முகவரியை சரியாக குறிப்பிட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தமிழரசி என்ற மாணவி நீட் தேர்வுக்கு விண்ணப்பத்திருந்தார் . அவருடைய ஹால் டிக்கெட்டில் அரசு கலைக்கல்லூரி, சேலம் மெயின் ரோடு என குறிப்பிடப்பட்டிருந்தால் அவர் சேலத்திற்கு வந்துவிட்டார். ஆனால் அவருடைய தேர்வு மையம் தர்மபுரி என தெரிய வந்தவுடன் பின்னர் அவசர அவசரமாக கார் ஒன்றினை ஏற்பாடு செய்து அதில் சென்றார். அதேபோல் எடப்பாடி சேர்ந்த தேசிகா என்ற மாணவி அரசு கலைக் கல்லூரி எடப்பாடி என குறிப்பிட்டு இருந்தோம், அதனை சரியாக கவனிக்காமல் சேலம் அரசு கலைக் கல்லூரிக்கு வந்து விட்டார். பின்னர் அங்கு தேர்வு கண்காணிப்பாளர்கள் தெரிவித்தவுடன் உடனடியாக ஆட்டோ ஒன்றின் மூலம் அவர் எடப்பாடிக்கு திரும்பினார். இதேபோல பத்துக்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் தர்மபுரி என மாவட்டத்தின் பெயரை குறிப்பிடாததால் சேலம் அரசு கலை கல்லூரிக்கு வந்து பின்னர் தர்மபுரிக்கு திரும்ப வேண்டிய சிரமம் ஏற்பட்டது. சிலர் கடைசி நேரத்தில் வந்ததால் தர்மபுரிக்கும் செல்ல முடியாமல் சேலத்திலும் எழுத முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர் , அவர்கள் பெற்றோரும் பதறிப் போயினர்.


