"அம்மாடியோவ்! ஒரு கரும்பு 50,100 ரூபாய்"... வாங்குனா நினைத்து நடக்குமாம்!

 
ச் ச்

காரைக்குடி அருகே புனித வனத்து அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவில் ஒரு கரும்பு 50,100 ரூபாய்க்கு ஏலம் போனது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாடத்தான் பட்டி கிராமத்தில் பழமையான புனித வனத்து அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் தை மாதம் 4 ஆம் தேதி பொங்கல் விழா, அந்தோணியார் சப்பர திருவீதி உலாவும் நடைபெறும். மறுநாள் காலை கரும்பு நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து நேர்த்திக் கடன் கரும்பு ஏலம், விவசாயம் செழிக்க பராம்பரிய மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஜனவரி 17-ம் தேதி நேற்று மாலை பொங்கல் விழா நடந்தது. இதில் அக்கிராம மக்கள் புனித வனத்து அந்தோணியார் ஆலையம் முன்பு கிராம ஒற்றுமையை போற்றும் வகையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். 

தொடர்ந்து சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியும் இரவில் சப்பரத்தில் புனித வனத்து அந்தோணியார், பாத்திமா மாதா தனி தனி சப்பரங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது மாலை, பொறி உள்ளிட்ட பொருள்கள் காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்தனர். தொடந்து இன்று காலை முக்கிய நிகழ்வான கரும்பு தொட்டில் கட்டி நேர்த்தி கடன் செலுத்தினர். அதன் பின் நேர்த்தி கடன் செலுத்தி புனித வனத்து அந்தோணியாருக்கு கொடுக்கப்பட்ட கரும்பு உள்ளிட்ட பொருள்கள் ஆலய வளாகத்தில் வைத்து ஏலம் விடப்பட்டது. இதில் முதல்  கரும்பு ரூ.50,100-க்கும் பாடத்தான் பட்டியை சேர்ந்த அந்தோனி என்பவரும், தொடர்ந்து 3வது கரும்பு ரூ 26,000-க்கு இராஜ சேகர் என்பவரும் ஏலம் எடுத்தனர். கரும்பு ஏலம் எடுத்தால் நினைத்த காரியம் நடக்கும், அதனால் போட்டி போட்டு ஏலம் எடுக்கின்றனர் என்று கிராமக்கள் கூறுகின்றனர்.