காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு- இருவிட்டார் சண்டைக்கு இடையே சைக்கிள் கேப்பில் தாலி கட்டிய இளைஞர்
காதல் திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பை தெரிவித்து வாலிபரின் குடும்பத்தினரிடம் சண்டையிட்ட போது சைக்கிள் கேப்பில் காதலிக்கு , காதலன் தாலி கட்டிய கலாட்டா திருமணம் திருத்தணி முருகன் கோயில் சன்னதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்துக் கொண்டிருந்தனர். அங்கு மண கோலத்தில் வந்த இளம் ஜோடி மலர் மாலை மாற்றிக் கொண்டு இளம் பெண் கழுத்தில் தாலி கட்ட முயன்ற போது சினிமா பாணியில் பெண் வீட்டார் மற்றும் வாலிபர் குடும்பத்தினர் அங்கு வந்தனர். மண கோலத்தில் இருந்த பெண்ணை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியபடி, எங்களது மகளை கடத்தி வந்து கட்டாய திருமணம் செய்ய பார்ப்பதாக கூச்சலிட்டனர். அங்கிருந்து மணக் கோலத்தில் இருந்த பெண்ணை கட்டாயமாக அழைத்துச் செல்ல பார்த்தபோது வாலிபரின் உறவினர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. ஒருபுறம் இரு வீட்டார் வாக்குவாதத்தில் இருந்த போதே திடீரென்று கேப்பை பார்த்து இளம் பெண் கழுத்தில் வாலிபர் தாலி கட்டியதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது.
அனுமதியின்றி கோயில் சன்னதியில் திருமணம் தொடர்பாக கோயில் அலுவலர் தகவலின் பேரில் போலீசார் இருவரையும் மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பொதட்டூட்பேட்டை சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் உமாபதி(21), பொம்மராஜுபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஹேமாச்சலம் என்பவரின் மகள் ரீட்டா(19) இருவரும் ஆர்.கே.பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும், அவர்கள் காதலித்து வந்ததாகவும், திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால், திருத்தணி கோயில் சன்னதியில் திருமணம் செய்துக் கொண்டதாக தெரிவித்தனர். இருவரும் மேஜர் என்பதால் போலீசார்மணமக்களை அனுப்பிவைத்தனர்.


