இப்படி கூட சாவு வருமா? வடமாநில சிறுமிக்கு நேர்ந்த சோகம்
கும்மிடிப்பூண்டி அருகே சோறு வடிக்கும் போது கைத்தவறி உடலில் கொட்டியதில் பலத்த தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். பீகாரை சேர்ந்த பிகாஷ் ரவிதாஸ் தமது மனைவி மற்றும் மகள் நந்தினி தாஸ் (16) ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி சிறுமி நந்தினி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த நிலையில், சோறு வடிக்கும் போது கை தவறி உடல் மீது கொதிக்கும் சோறுடன் சுடுகஞ்சி ஊற்றியதால் சிறுமிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பலத்த தீக்காயங்களுடன் சிறுமி நந்தினி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு வார சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமையலின் போது உடலில் சுடுநீர் கொட்டி தீக்காயங்களுடன் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.