பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டி படுகொலை
சிவகாசி அருகே பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கோடாரியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டி கிராமத்தில் தீபாவளி தினத்தன்று காளீஸ்வரி என்பவர் தனது மேய்ச்சல் மாடுகளை அழைத்து செல்லும் போது, அதே கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி என்பவர் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. பட்டாசு சத்தம் கேட்டு மாடு மிரண்டதால் அதே ஊரை சேர்ந்த பொண்ணுப்பாண்டியின் அண்ணன் முனிராஜ் வீரபாண்டியை சத்தம் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. தனது அண்ணனை திட்டியதாக பொன்னுப்பாண்டி வீரபாண்டியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீரபாண்டி அவரது நண்பர்களுடன் சேர்ந்து பொண்ணுபாண்டியை கொலை செய்ய திட்டம் தீட்டி கடந்த 13ம் தேதி இரவு பொண்ணுப்பாண்டியை சமாதானம் பேசுவதற்காக போனில் அழைத்துள்ளனர்.
இதனை நம்பி சென்ற பொண்ணுப்பாண்டியை வீரபாண்டி அவர் வேலை பார்க்கும் தோட்டத்திற்கு அழைத்து வீரபாண்டி மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து கோடாரியால் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியது. படுகொலை தொடர்பாக திருத்தங்கல் காவல் நிலையத்தில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிவகாசி டிஎஸ்பி தனஞ்செயன் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் கொலை செய்த வடமலாபுரம் கார்த்தி 30, நமஸ்கரித்தான் பட்டி வீரபாண்டி (25), மாரிமுத்து (26), பால்ராஜ் (24), அசோக் (22) ஆகிய 5 பேரை கைது செய்து தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி போலீசார் வருகின்றனர்.