ஆதவ் அர்ஜுனா விவகாரம்: விஜய் பேசினாரா? - இபிஎஸ் விளக்கம்..

 
eps eps


ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை வீடியோ குறித்து விஜய் உங்களுடன் பேசினாரா? என்கிற கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை  ஆகியோர் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ஒருமையில்  பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.  அதில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடன் புல்வெளியில் நடந்தபடி ஆதவ் அர்ஜுனா பேசுவது இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய், தங்களை தொடர்பு கொண்டு பேசினாரா என்கிற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி இல்லை என பதிலளித்துள்ளார்.  

முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “கல்விக்கொள்கை குறித்து ஏன் திமுக அரசு ஏன் கவனம் செலுத்தவில்லை. அப்பொழுதே மத்திய அரசு பிடியில் இருந்து மாநில அரசுப் பிடியில் கல்வியை கொண்டுவந்திருக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு, ஆட்சியில் இல்லாத போது குறை சொல்வதே திமுகவின் வாடிக்கை. 

aadhav arjuna

இது ஒரு மோசமான ஆட்சி என்பதற்கு பந்தல்குடி கால்வாய் திரைச்சீலை கொண்டு மறைக்கப்பட்டதே சாட்சி. அவர்களுக்கே அது பிடிக்கவில்லை. முதலமைச்சர் வரும்போது சாக்கடை கழிவுநீர் வெளியேற்றப்படுகிற , தூர்வாரப்படாத , மிக மோசமாக துர்நாற்றம் வீசுகிற கால்வாய் அவர்களுக்கே பிடிக்காததால் தான் மறைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.  

ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்து விட்டார். அத்துடன் அந்த விவகாரம் முடிந்துவிட்டது. ஆதவ் அர்ஜுனா தொடர்பாக , விஜய் தன்னை தொடர்புகொண்டு பேசவில்லை. 

அதிமுகவுக்கும், தேமுதிகவுக்கும் சுமூகமான உறவு இருக்கிறது. ஏதாவது செய்து அதனை உடைக்க முயற்சிக்க வேண்டாம். அத நடக்காது” என்றார். 

eps mkstalin

மேலும் “திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 27வது தீர்மானத்தில் துரோக அதிமுக என குறிப்பிடப்பட்டுள்ளது. அது நாங்கள் அல்ல; திமுக தான் நாட்டிற்கு துரோகம் இழைத்து வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை அம்மா ஆட்சியிலும் சரி, என்னுடைய ஆட்சியிலும் சரி சிறப்பான திட்டங்களை நிறைவேற்றினோம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணி காக்கப்பட்டது. 

தற்போதைய திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டு காலமாக மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது. ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களை திறந்தாளே நாள்தோறும் இதுபோன்ற செய்திகள் தான் வருகின்றன.  அப்படி ஒரு மோசமான ஆட்சியை செய்து வரும் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி தான் துரோக கட்சி.” என்று தெரிவித்தார்.