தீபாவளியை முன்னிட்டு காம்போ ஆஃபர்களை அறிவித்த ஆவின்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் விற்பனைக்காக காம்போ ஆஃபர்களை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதுதவிர, பாலின் உப பொருள்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருள்களை தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இது தவிர்த்து, ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகளை ஆவின் நிறுவனம் விற்பனை செய்யயும்.
இதன்படி, இந்தாண்டு ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் சார்பில் சிறப்பு இனிப்பு, கார வகைகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் காம்போ ஆபர்களையும் ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.இதன்படி, மைசூர்பாகு 250 கிராம், மிக்சர் 200 கிராம், ஆவின் குக்கீஸ் 80 கிராம், 10 ரூபாய் சாக்லேட் -1 ஆகியவை அடங்கிய காம்போ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் நெய் பாதுஷா 250 கிராம், பாதாம் மிக்ஸ் 200 கிராம், குலாப் ஜாமூன் 250 கிராம், மிக்சர் 200 கிராம், 10 ரூபாய் சாக்லேட் -1 அடங்கிய காம்போ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காஜு பிஸ்தா ரோல் 250 கிராம், காஜூ கட்லி 250 கிராம், நெய் பாதுஷா 250 கிராம், முந்திரி அல்வா 250 கிராம், அடங்கிய காம்போ 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் இனிப்பு, கார வகைகளைப் பொறுத்தவரை ‘பல்க்’ புக்கிங் செய்தால், குறிப்பிட்ட சதவீதத்தில் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.


