அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் ஆவின், பால்வளத்துறை - பால் முகவர்கள் சங்கம் கண்டனம்..

 
ஆவின் பால்


 தமிழக முதல்வரின் திட்டங்களை சீர்குலைத்து பால்வளத்துறை மற்றும் ஆவின் அதிகாரிகள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.  

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவினில் பால் கொள்முதல் குறையவே இல்லை, குறைந்தது போன்ற தவறான கருத்துக்களை தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக பால் முகவர்கள் பரப்புகிறார்கள் என்கிறார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்கள்.

ஆனால் கடந்த ஆண்டோடு  நடப்பாண்டின் இந்த மாத பால் கொள்முதலை ஒப்பிடுகையில் தமிழகத்தில் அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பருவ காலத்தில் கூட பால் கொள்முதல் வேகமாக குறைந்துள்ளது எனவும், பலமுறை அறிவுறுத்தப்பட்ட பிறகும் தற்போது வரை அதே போக்கு தொடர்வதாகவும், அதனால் ஏற்பட்ட பால் கொள்முதல் சரிவு காரணமாக அவுட்சோர்சிங் மூலம் அதிக அளவு வெண்ணெய் மற்றும் SMP வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வருவதால் தேவைகள் இன்னும் அதிகரிக்கக்கூடும் என நிர்வாக இயக்குனர் திரு. வினித் ஐஏஎஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆவின் நிறுவனத்தில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு

ஆவினுக்கான பால் கொள்முதல் தொடர்ந்து குறைந்து வருவதாக நல்லெண்ண அடிப்படையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வந்தது தவறான பரப்புரை என்றால் ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. வினித் ஐஏஎஸ் அவர்கள் தெரிவித்துள்ள தகவலுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்..?

மேலும் தமிழ்நாட்டின் பால் கொள்முதலில் ஆவினுடைய பங்கு வெறும் 16%ல் இருந்து தற்போது  12% ஆக குறைந்து விட்ட சூழலில் இது கடந்த 2021ல் பால் கொள்முதல் 38.21 லட்சம் லிட்டராக இருந்த நிலையில் தற்போது 28.78 லட்சம் லிட்டராக குறைந்ததால் இது 2021ம் வருடத்தை விட 24.7% குறைவாகும் என்பது அதிர்ச்சியளிக்கும் விசயமாகும்.

அதே சமயம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 3.00ரூபாய் குறைத்ததும், ஆவின் பால் விற்பனை விலையை விட தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை விலை லிட்டருக்கு சுமார் 12.00ரூபாய் முதல் 20.00ரூபாய் வரை அதிகம் என்பதாலும் பொதுமக்கள் அதிகளவில் ஆவினை நாடி வந்த காரணத்தால் ஆவின் பால் விற்பனை கடந்த 2021ம் ஆண்டை விட தற்போது கிட்டத்தட்ட 8% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் பேருந்துகளில் மகளிர் இலவச பயணத்தால் பயன் பெற்றது போல ஆவின் பால் விற்பனை விலை குறைப்பால் தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து உள்ளது தெளிவாக தெரிகிறது. இது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றால் அது மிகையாகாது.

சு.ஆ.பொன்னுசாமி (நிறுவனத் தலைவர்) தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்

ஆனால் பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை அலுவலர்களும், மாவட்ட ஒன்றிய பொது மேலாளர்களும் பால் கொள்முதலை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி ஆவின் பால் விற்பனையை உயர்த்த ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள Extension Asst. மற்றும் அலுவலக பணியாளர்கள் சனி ஞாயிறுகளில் முகாம் நடத்தியது போல பால் கொள்முதலை அதிகரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும், குறிப்பாக கால்நடை மருத்துவர்கள் கூட இதில் எந்த ஒரு கூடுதல் கவனமும் செலுத்தவில்லை என்பதும் மிகுந்த வருத்தத்திற்குரியதாகும்.

பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆவின் ஒன்றியங்களின் பொது மேலாளர்களின் அலட்சியம், மெத்தனப்போக்கு இவற்றின் காரணமாகவும், ஆவினில் ஊழல், முறைகேடுகள் செய்ய வேண்டும் என்கிற தீய எண்ணத்தாலும் தான் வெளி மாநிலங்களில் இருந்து அதிக விலை கொடுத்து வெண்ணெய், பால் பவுடர் வாங்கி காலம் தள்ள வேண்டிய சூழல் ஆவினுக்கு ஏற்பட்டுள்ளதோடு, ஆவினில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வுக்கான பலன்களை கூட வழங்க முடியாத துர்பாக்கிய நிலைக்கு ஆவின் தள்ளப்பட்டுள்ளது.

இதையெல்லாம்  சுட்டி காட்டி, ஆவின் நிறுவனத்தை காத்திட வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் ஆவின் அதிகாரிகளும், பாலுற்பத்தி மற்றும்  பால்வள மேம்பாட்டுத்துறை   அதிகாரிகளும், மாவட்ட ஒன்றியங்களின் பொது மேலாளர்களும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் குறித்து  பால்வளத்துறை அமைச்சர் அவர்களுக்கு பொய்யான தகவலை கொடுத்து வருவதோடு, தமிழக முதல்வரின் திட்டங்களை திட்டமிட்டு சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, எதிர்கட்சிகள் ஆளும் கட்சியை எள்ளி நகையாடும் செயலை செய்ய வைத்து வருகிறார்கள் என்பது வேதனைக்குரிய விசயமாகும். ஆக உண்மைக்கு காலம் இல்லை என்பதை கடந்த காலங்களைப் போலவே நிகழ்காலமும் உணர்த்துகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.