ஆவின் தயிர் விலையை உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது - சசிகலா

 
sasikala

ஆவின் தயிர் விலையை உடனே திரும்ப பெற வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

இதுக்குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூர் ஒன்றியத்தில் ஆவின் தயிர் விற்பனை விலையை 1 கிலோ 60 ரூபாயில் இருந்து 70 ரூபாயாக மாற்றியமைத்து ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் விற்பனை விலையை நேரடியாக உயர்த்தியிருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், இது போன்று உயர்த்துவது தொடர்பாக பால் முகவர்களுக்கு எந்த ஒரு முறையான முன்னறிவிப்போ, சுற்றறிக்கையோ கொடுக்காமல் திடீரென்று விலையை உயர்த்தி விற்பனை செய்வது பகல் கொள்ளையாக இருக்கிறது. மக்களை காக்க வேண்டிய அரசே  அவர்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து பணத்தை சுரண்டுவது எந்த விதத்தில் நியாயம்? 

tn

அதுமட்டுமின்றி 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 170 கிராம் தயிர் பாக்கெட்டின் அளவை 100 கிராமாக குறைத்து அதே 10 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தகவல் வருகிறது. இதுபோன்று ஆவின் தயிரின் விற்பனை விலையை தன்னிச்சையாக உயர்த்தி பொதுமக்கள் மீது சுமையை ஏற்றுவதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கமும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

திமுக ஆட்சிக்கு வந்தபோது ஆவின் தயிர் விலை ஒரு கிலோ 54 ரூபாய் என்று இருந்தது, ஆனால் இன்றைக்கு ஒரு கிலோ 70 ரூபாய் என்ற அளவுக்கு உயர்த்தியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்றாவது ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் சூழலில் ஆவினில் விற்பனை செய்யப்படும் நெய், வெண்ணெய் தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் பலமுறை வரலாறு காணாத வகையில் அவற்றின் விற்பனை விலையினை உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக ஆவின் நெய் 3 முறையும், தயிர் 3 முறையும், பால் அதிகாரபூர்வமாக ஒரு முறையும், மறைமுகமுகமாக கொழுப்பு குறைந்த பால் என கூறியும் விற்பனை விலை உயர்த்தப்பட்டது. மேலும், வெண்ணை, பன்னீர் ஆகிய பொருட்களின் விற்பனை விலையும் 3 முறை இந்த ஆட்சியில் உயர்த்தப்பட்டுள்ளது. 

sasikala

இதுபோன்று, ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை மாதா மாதம் உயர்த்திக்கொண்டே போனால், ஏழை எளிய சாமானியர்களுக்கு ஆவின் பால் பொருட்களை பெறுவது ஒரு எட்டாக்கனியாக போய்விடும். அதன்பின்னர், ஆவின் நிர்வாகத்தையே இழுத்து மூடும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடும் என திமுக தலைமையிலான அரசை எச்சரிக்கிறேன்.  திமுக தலைமையிலான அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமாக தர வேண்டிய பால் கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க முன் வராத நிலையில், ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையை மட்டும் தொடர்ந்து உயர்த்தி கொண்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.  தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கிராமப்புற ஏழை எளிய பெண்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் எண்ணற்ற பசுக்களை மக்களுக்கு வழங்கி மாநிலத்தில் பால் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கியதன் மூலம் தமிழகத்தில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். ஆனால், இன்றோ திமுக தலைமையிலான அரசு ஆவின் நிறுவனத்தை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதன் மூலம் பால் உற்பத்தியாளர்களின் வயிற்றில் அடிப்பதை யாரும் மன்னிக்க மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  தமிழகத்தில் ஏற்கனவே தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் வாழ வழியின்றி தவிக்கும் ஏழை எளிய சாமானிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மறைமுகமாக உயர்த்தப்பட்ட ஆவின் தயிர் விலையை உடனே திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.