"பால் விற்பனை விலையை ஆவின் பால் நிறுவனமும், தமிழக அரசும் உயர்த்தக் கூடாது" - ஜி.கே.வாசன்

 
gk

பால் கொள்முதல் விலை உயர்த்தியதால், பால் விற்பனை விலையை ஆவின் பால் நிறுவனமும், தமிழக அரசும் உயர்த்தக் கூடாது என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆவின் பால் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 உயர்த்தி இருக்கிறது. இதனால் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள்.

GK Vasan

கால்நடைக்கான இடுப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் உற்பத்தி செலவினம் அதிகரித்ததால் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை வைத்தார்கள். தற்பொழுது ஆவின் பால் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.ஆவின் பால் நிறுவனமும், தமிழக அரசும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி அளித்துவிட்டு, அதனை ஈடுக்கட்ட ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தக் கூடாது. ஏற்கனவே ஆவின் பால் நிறுவனம் பால் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஆகவே பால் விற்பனை விலையை மீண்டும் உயர்த்தினால் பால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

gk vasan

ஆவின் பால் நிறுவனம் தமிழக அரசின் நிறுவனம், அவை என்றும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவே இருக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களையும், பால் நுகர்வோர்களையும் பாதுகாப்பதாகவே அவற்றின் செயல்பாடுகள் அமைய வேண்டும். ஆவின் நிறுவனம் மற்ற மாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்வதை கைவிட்டு, நமது மாநில பால் உற்பத்தியாளர்களிடமே பால் கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் பால் உற்பத்தியாளர்களுக்கும் பயன் கிடைக்கும், ஆவின் நிறுவனத்திற்கும் கொள்முதல் அளவும் உயர்ந்து, நுகர்வோரின் பால் தட்டுப்பாடும் விலகும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.