மருத்துவக்கல்லூரி கல்வி கட்டண உயர்வை கைவிடுக - தினகரன் வலியுறுத்தல்

 
ttv dhinakaran

தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான ஆண்டு கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என என்று டிடிவி தினகரன்  வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசு மருத்துவக்கல்லூரி, அரசு பல் மருத்துவக் கல்லூரி, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் ஆகியோருக்கான கட்டணத்தை முந்தைய கட்டணத்தில் இருந்து கணிசமான அளவிற்கு உயர்த்தியிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

TTV

மருத்துவக் கல்வி இயக்ககம் தனது கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வகுப்பறைகள், தங்கும் விடுதிகள், உணவு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மருத்துவக்கல்வி பயிலும் மாணவர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். அதனை முறைப்படுத்தாமல் திடீரென கட்டணத்தை மட்டும் உயர்த்திருப்பது ஏற்புடையது அல்ல. ஏற்கனவே கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக்கனியாக மாறிவரும் சூழலில், இந்தக் கட்டண உயர்வு மேலும் அவர்களின் கனவை சிதைக்கவே செய்யும்.



தற்போது திமுக ஆட்சியில் பல்வேறு வகையான விலை உயர்வால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பெற்றோரை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வகையிலான மருத்துவக் கல்விக் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.