40 நிமிடங்கள்.. அவர் பிரதமராகவும், நான் முதல்வராகவும் இந்த சந்திப்பு - முதல்வர் ஸ்டாலின்..

 
40  நிமிடங்கள்.. அவர் பிரதமராகவும், நான் முதல்வராகவும் இந்த சந்திப்பு -  முதல்வர் ஸ்டாலின்.. 

அவர் பிரதமராகவும், நான் முதலமைச்சராகவும் இந்த சந்திப்பு நடந்துள்ளது.. கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்திற்கு வரவேண்டிய நிதிகளை கேட்டுப்பெறுவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.  இதற்காக  சென்னையில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற தமிழக முதல்வருக்கு  அங்கு  திமுக எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.   தொடர்ந்து  பிரதமர் மோடியை இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.    பின்னர் பிரதமர் அலுவலகம் சென்ற அவர்,  தமிழ்நாட்டின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தார்.  

குறிப்பாக அதில் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டப்பணிகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல், சமக்ர சிக்‌ஷா அபியான் என்னும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ரூ.573 கோடியை விடுவித்தல்,   தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது.  

mk stalin coat

பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியுடன் அளித்துள்ளேன்.  சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகள் ஒன்றிய - மாநில அரசுகளின் கூட்டாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வெளியானது. எனினும், இதுவரை நிதி வழங்கப்படவில்லை. உரிய நிதிப்பங்கீடு அளிக்காததால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் புதிய அரசு அமைந்துள்ளதால் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.  அவர் பிரதமராகவும், நான் முதலமைச்சராகவும் இந்த சந்திப்பு நடந்துள்ளது. 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்தது. கோரிக்கைகள் அனைத்தையும் அமைதியாக கேட்டார். நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.  

 மேலும், இந்த சந்திப்பின் போது  பிரதமர் மோடிக்கு ‘தடம் பெட்டகத்தை’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசாக வழங்கினார்..  நெல்லை வாழைநாரினால் ஆன கூடையில், பழவேற்காடு பனை ஓலை ஸ்டாண்ட், விழுப்புரம் டெரகோட்டா சிற்பங்கள், கும்பகோணம் பித்தளை விளக்கு, நீலகிரி தோடா சால்வை, பவானி ஜமுக்காளம் உள்ளிட்டவை இருக்கும்.