"பேராசிரியர் திரு. ஏ.சி.காமராஜ் அவர்களது மறைவு நாட்டிற்குப் பேரிழப்பு" - அண்ணாமலை

 
Annamalai

ஏ.சி.காமராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் தலைவரான பேராசிரியர் திரு ஏ.சி.காமராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். 

நதிகள் இணைப்பிற்கான இந்திய அரசின் உயர் மட்டக் குழுவிலும் உறுப்பினராக இருந்த பேராசிரியர் திரு ஏ.சி.காமராஜ் அவர்கள், நீர்வழிப் பாதைகளை உருவாக்குவதன் மூலம் நதிகளை எளிதாக இணைக்கலாம் என்கிற திட்டத்திற்கான ஆய்வுகளை வெளியிட்டவர். 


தமிழகத்தில் ஓடும் 17 நதிகள் இணைப்பு, கங்கை, பிரம்மபுத்திரா நதிகள் இணைப்பு மற்றும் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி உள்ளிட்ட தென்னக நதிகள் இணைப்பிற்கான திட்டங்களையும் முன்வைத்து, நீர்வழிப் பாதை அமைக்கும் ஆய்வறிக்கையை வெளியிட்டவர். இதன் மூலம் வெள்ள சேதங்கள் குறைந்து, மக்களுக்கு ஆண்டு முழுவதும் குடிநீர் கிடைப்பதோடு, நாடு முழுவதும் கூடுதலாக 15 கோடி ஏக்கர் நிலம்  பாசன வசதியை பெறும் வகையிலான பல திட்டங்களை முன்வைத்தவர். 

சிறந்த தொலை நோக்குச் சிந்தனையாளராகிய பேராசிரியர் திரு. ஏ.சி.காமராஜ் அவர்களது மறைவு, நாட்டிற்குப் பேரிழப்பு. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.