சென்னையில் அடுத்த மாதம் முதல் ஏசி ரயில் சேவை- வெளியான அறிவிப்பு

 
ச் ச்

ஏப்ரல் முதல் வாரத்தில் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கவாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Ac train

சென்னை ஐ.சி.எஃப்., ஆலையில், தெற்கு ரயில்வேக்கான முதல் ஏசி மின்சார ரயில் பிப்ரவரி முதல் வாரத்தில் தயாரானது. 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி மின்சார ரயில் சென்னை ரயில் கோட்டத்தில் கடந்த மாதம் 3-வது வாரத்தில் ஒப்படைக்கப்பட்டது.  12 பெட்டிகளை கொண்ட இந்த ஏசி ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும். அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ரயில் கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில், ஏசி மின்சார ரயில் இயக்கப்படும் நேரம், நிறுத்தம் தொடர்பாக ரயில்வே போக்குவரத்து பிரிவின் பரிந்துரை வெளியாகியுள்ளது. இதில், இந்த ரயில் தாம்பரம் பணிமனையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, காலை 6.45 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும். சென்னை கடற்கரையில் இருந்து காலை 7.00, பிற்பகல் 3.45, இரவு 7.35 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு, தாம்பரத்தை முறையே காலை 7.48, மாலை 4.20, இரவு 8.30 மணி ஆகிய நேரங்களில் அடையும். அங்கிருந்து புறப்பட்டு , செங்கல்பட்டுவை முறையே காலை 8.35, மாலை 5.25 அடையும். செங்கல்பட்டுவில் இருந்து காலை 9.00, மாலை 5.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு, தாம்பரத்தை முறையே 9.38, மாலை 6.23 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு, சென்னை கடற்கரையை முறையே காலை 10.30, இரவு 7.15 மணிக்கு அடையும். இரவு 7.35 ரயில் சேவை தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.

இந்த ரயில் அதிகாலையில் தாம்பரம் பணிமனையில் இருந்து புறப்பட்டு கடற்கரை வந்தடையும் போதும், இரவில் கடற்கரையில் இருந்து தாம்பரம் பணிமனைக்கும் செல்லும்போதும் புறநகர் பாதையில் இயக்கப்படும். பிரதான பாதையில் செல்லும்போது, இந்த ரயில் கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் சேவை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படும்.