பாதுகாப்புப் பணியின்போது உயிரிழந்த ஏ.சி.பி., ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.

 
காவல் உதவி ஆணையர்

சென்னை அண்ணா சாலை மன்றோ சிலை அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்த காவல்துறை உதவி ஆணையரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார். 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள முதலமைச்சரின் இரங்கல் குறிப்பில் “சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆணையராக பணியாற்றிவந்த  சிவகுமார் (வயது 53) இன்று (31.8.2024) பகல் சுமார் 12.45 மணியளவில் சென்னை அண்ணா சாலை மன்றோ சிலை அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சைக்காக இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். 

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காவல்துறை உதவி ஆணையர்  சிவகுமார் அவர்களின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
 சிவகுமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு 24 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.