கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிரடி போனஸ்
கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில், “திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, மிகை ஊதியம் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, மிகை ஊதியம் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி மாதாந்திர சம்பள உச்சவரம்பான ரூ.21,000-ஐ தளர்த்தி, அனைத்து ‘சி’, ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம், கருணை தொகை வழங்கப்படும்.
இதன்படி, இலாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகை இல்லாத கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு மிகைஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். போனஸ் சட்டத்தின்கீழ் வராத தலைமைச் சங்கங்கள், மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2400-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இதனால் மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ரூ.7000- ம் அதிகபட்சம் ரூ.16400/- ம் பெறுவார்கள். இதன் மூலம் சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட கூட்டுறவு துறை பணியாளர்களுக்கு போனஸ் கிடைக்கும் என்று கூட்டுறவு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


