நடிகர் அஜித்குமார் தந்தை மறைவு - அரசியல் தலைவர்கள் இரங்கல்...

 
Ajith Kumar father

நடிகர் அஜித்குமாரின்  தந்தை மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

நடிகர் அஜித்குமாரின் தந்தை மணி என்கிற சுப்பிரமணியம் உடல்நல குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84.  கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர்,  இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனையடுத்து நடிகர் அஜித்குமாரின்  தந்தை மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  அந்தவகையில் அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தந்தையாரின் இறுதி சடங்குகள் குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம் - அஜித்குமார்..

எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், “தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்,தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள். ” என்று குறிப்பிட்டுள்ளார்.  

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.P.சுப்ரமணியம் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.  தமது தந்தையை இழந்து தவிக்கும் திரு.அஜித் குமார் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அன்புமணி ராமதாஸ், “தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியன் அவர்கள் காலமானதை அறிந்து  வருத்தமடைந்தேன். அவர் நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”என்று பதிவிட்டுள்ளார்.