“என்னை கைது செய்யவில்லை, விசாரணைக்கு அழைத்து சென்றனர்”- நடிகர் தினேஷ் பேட்டி

 
ச் ச்

ஒரு வழக்கு தொடர்பாக காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள், கைது செய்யவில்லை. பொய்யான வழக்கு என்று ஆவணங்களை காண்பித்தேன் விடுவித்து விட்டார்கள் என துணை நடிகர் தினேஷ் பேட்டியளித்துள்ளார்.

1

நெல்லை மாவட்டம் பனங்குடி காவல் நிலையத்தில் பிரபல துணை நடிகர் தினேஷ் கைது செய்யப்பட்டது குறித்து செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது. இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை நடிகர் தினேஷ்குமார், “நெல்லை மாவட்டம் பனகுடி பகுதியைச் சேர்ந்த நாய்க்குட்டி செல்வின் என்று சொல்லக்கூடிய ஒருவருக்கும், எனக்கும் ஒரு பிரச்சனை தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு சம்பந்தமாக அடிக்கடி வள்ளியூர் நீதிமன்றத்திற்கு ஆஜராக வருவேன். அந்த நேரத்தில் நான் நெல்லை மாவட்டம் பனகுடி அருகே உள்ள தண்டையார்குளம் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி என்பவரது மனைவிக்கு மின்சார துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்தேன் எனவும் சம்பந்தப்பட்ட கருணாநிதி என்பவரை நானும் எனது தந்தையும் தாக்கினோம் என்றும்  என் மீது பொய்யான வழக்கு ஒன்றை பணகுடி காவல் நிலையத்தில் நாய்க்குட்டி செல்வினின் தூண்டுதலின் பேரில்  புகார்  கொடுத்திருக்கின்றனர். இன்று ஏற்கனவே இருந்த வழக்கு தொடர்பாக வள்ளியூர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தேன். அப்பொழுது பணகுடி காவல்துறையைச் சேர்ந்த போலீசார் என்னை வழக்கு தொடர்பாக விசாரணைக்காக அழைத்துச் சென்றனர், கைது செய்யவில்லை. சம்பந்தப்பட்ட வழக்கின் ஆவணங்களை படித்து பார்த்து அதில் இருக்கும் விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தேன், காவல்துறையினர் என்னை விடுவித்துவிட்டனர். தேவைப்பட்டால் அழைக்கிறோம் என்று கூறினார்கள். எப்பொழுது வேண்டுமானாலும் அழையுங்கள், ஒத்துழைப்பு தருகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து வந்தேன். தேவையில்லாமல் ஒருவரின் தூண்டுதலின் அடிப்படையில் என் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது” என்று கூறினார்.