முறையாக சம்மன் வழங்கப்படாமல் கஸ்தூரி கைது- வழக்கறிஞர் பேட்டி

 
புழல் சிறையில் நடிகை கஸ்தூரி அடைப்பு- நவ.29 வரை நீதிமன்ற காவல்

நடிகை கஸ்தூரிக்கு முறையாக சம்மன் வழங்கப்படாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, நீதிமன்றத்தில் நாளை மறுநாள் கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைக்கும் என அவரது வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புழல் சிறையில் நடிகை கஸ்தூரி அடைப்பு- நவ.29 வரை நீதிமன்ற காவல்

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி சென்னை புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரியை அவரது வழக்கறிஞர்கள் குழுவினர் இன்று நேரில் சந்தித்து பேசினர். தொடர்ந்து சிறை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பிரபாகரன், “நடிகை கஸ்தூரிக்கு முறையாக சம்மன் வழங்கப்படாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வீட்டில் சம்மனை ஒட்டி விட்டு ஹைதராபாத்தில் அவரது வீட்டில் இருந்தபோது கஸ்தூரியை கைது செய்துள்ளனர். முறையாக வழக்கு விசாரணை தொடர்பாக அழைக்கப்படாமல் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கோரி இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இந்த மனு நாளை மறுநாள் எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது, அப்போது கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைக்கும், புழல் சிறையின் கோரன்டைன் வார்டில் அறை எண் 10-இல் நடிகை கஸ்தூரி அடைக்கப்பட்டு உள்ளார், நேற்றிரவு அவர் சாப்பிடவில்லை, இன்று முதல் சாப்பிடுகிறார். நடிகை கஸ்தூரி மீது பொய்யான வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது நடிகை கஸ்தூரி நல்ல மன நிலையில் உள்ளார், அவரது மகனுடன் பேச வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். சிறை கைதிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது போன்று அவரது மகனுடன் பேச அனுமதி வழங்கப்படும் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்” என்றார். 

ஏற்கனவே அவதூறு வழக்கில் எஸ்வி சேகருக்கு பிணை கிடைத்துள்ள நிலையில், அந்த வழக்குகளை எல்லாம் தங்களது ஜாமின் மனுவில் மேற்கோள் காட்டியுள்ளதால் வழக்கு தள்ளுபடியாகும் என நம்பிக்கை தெரிவித்தார். புழல் மகளிர் சிறையில் நடிகை கஸ்தூரிக்கு விசாரணை கைதி எண்: PID 644798 கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.