நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது

 
Mayilsamy

மாரடைப்பால் மரணம் அடைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. 
 
தமிழ் திரையுல்கில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மயில்சாமி(57) .  சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலில் டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் பங்கேற்ற மயில்சாமி, கோயிலில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில்வீடு திரும்பினார். இதனையடுத்து  3.30 மணி அளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளார்.  பின்னர் அவரை  உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

mayilsamy

இதையடுத்து, அவரது உடல்  சாலிகிராமத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, நடிகர்கள் ராதாரவி, சத்யராஜ், பாக்கியராஜ், பாண்டியராஜன், சூரி, ஜெயராம், சித்தார்த், மனோபாலா, கோவை சரளா, ரேகா, செந்தில், எம்.எஸ்.பாஸ்கர், டிரம்ஸ் சிவமணி  உள்ளிட்ட  ஏராளமான திரையுலகினர் திரண்டு அவரது  உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்றது. மயில்சாமி உடலுக்கு சிவ வாத்தியங்கள் முழங்க கலைஞர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகரில் துவங்கிய ஊர்வலத்தில் நடிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. வடபழனி மின்மயானத்தில் இறுதி ஊர்வலம் சென்றடைந்த பிறகு மயில்சாமி உடல் அங்கு தகனம் செய்யப்பட்டது.