முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூரி ரூ.10 லட்சம் நிதியுதவி

 
Soori

நடிகர் சூரி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். 

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிக்கு உள்ளாகினர். அரசு சார்பில் வீடுகளுக்கு சென்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. 15க்கும் மேற்பட்டோர் இந்த மழை வெள்ளத்தால் உயிரிழந்தனர். ஏராளமான கால்நடைகளும் உயிரிழந்தன. இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்காள் முயன்ற உதவியை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று தொழில் நிறுவனங்கள், நடிகர்கள் என பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 


இந்த நிலையில், நடிகர் சூரி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மிக்ஜாம் புயல் – கன மழை நிவாரணப் பணிகளுக்கு துணை நிற்கின்ற வகையில், சமூக அக்கறையுடன் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், திரைப்பட நடிகர் சகோதரர் சூரி மற்றும் மதுரை அம்மன் உணவகம் சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக  ‘தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.