தவெக மாநாட்டுக்கு விஜய் அழைத்தால் நிச்சயம் செல்வேன்: விஜய் ஆண்டனி
விஜய் நண்பர் தான், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு விஜய் அழைத்தால் கண்டிப்பாக செல்வேன் என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக உள்ள ஹிட்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.இதில் நடிகர் விஜய் ஆண்டனி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு ஹிட்லர் திரைப்படத்தின் பாடலை வெளியிட்டனர். தொடர்ந்து மேடையில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, “ஹிட்லர் திரைப்படத்தில் ரொமன்ஸ் காட்சிகள் அதிக அளவில் இருக்காது, அடுத்தடுத்து வரக்கூடிய படங்களில் ரொமன்ஸ் காட்சிகளில் நடிப்பேன். இந்தப் படத்தில் தான் நான் இசையமைக்கவில்லை , ஆனால் ஒரு பாடலை பாடியுள்ளேன் அடுத்து வரக்கூடிய இரண்டு படங்களில் அனைத்து பாடல்களுக்கும் நானே இசையமைப்பாளன். என் மனைவி சில காலங்களாக எனது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை, கூடிய விரைவில் என் மனைவி சகஜமான நிலைக்கு வந்தவுடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.
விஜய் நல்ல கலைஞர், தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் விஜய் நடிக்க வாய்ப்பு இல்லை, காலம் தான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும். விஜய் நண்பர் தான், விஜய் மாநாட்டுக்கு அழைத்தால் கண்டிப்பாக செல்வேன். 2005 கெளதம் வாசுதேவ் மேனன் படத்தில் வாய்ப்புக்கு காத்திருந்தேன். ஆனால் இசை அமைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது அவருடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.