தவெக கட்சிக் கொடியினை இன்று அறிமுகம் செய்கிறார் நடிகர் விஜய்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி மற்றும் பாடலை நடிகர் விஜய் இன்று (ஆகஸ்ட் 22 ) அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு நடிகர் விஜய் அறிவித்துள்ள நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் அதேவேளையில், அடுத்தக்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டினை செப்டம்பர் இறுதிக்குள் நடத்துவதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் இன்று (ஆகஸ்ட் 22) நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த கட்சிக் கொடியினை சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து எளிமையான முறையில் அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி தவெக தலைவர் விஜய், தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். கட்சிக்கொடி அறிமுக விழாவிற்கு 5,000 பேர் பங்கேற்பார்கள் எனக்கூறி காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு அனுமதி கோரியிருந்த நிலையில், 300 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுள்ளது.
பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் காலை 9.15 மணிக்கு மேல் கட்சிக் கொடியை அறிமுகம் செய்வார் என்றும், தொடர்ந்து நிர்வாகிகள் இடையே 20 நிமிடம் உரையாற்றுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கட்சி அலுவலகத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முக்கிய பொறுப்பாளர்கள், தொண்டரணி, மாணவரணி, மகளிர் அணி, இளைஞரணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணி தலைவர்கள் என 300 பேர் மட்டுமே பங்கேற்கின்றனர். அவ்வாறு பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு QR code அடங்கிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது
இந்த QR code அடையாள அட்டை வைத்திருக்கும் நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தி கோட் படப்பிடிப்பிற்காக கேரளாவில் பயன்படுத்தப்பட்ட துபாய் பவுன்சர்கள், ஏற்கனவே கல்வி விருது விழாவில் பாதுகாப்பு வழங்கிய நிலையில், தொடர்ந்து கட்சியின் கொடி அறிமுக விழாவிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.