மருத்துவருக்கு கத்திக்குத்து- அரசின் மெத்தனப்போக்கே காரணம்: விஜய்

 
விஜய்

உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்கு தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சாடியுள்ளார்.

கூத்தாடினா கெட்ட வார்த்தையா? அவனுக்குள்ள கோபம் கொப்பளிச்சா என்னாகும்  தெரியுமா? விஜய் ஆவேசம்! | TVK President Vijay Responds to Critics Labeling  Him as a 'Koothadi' - Tamil ...

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.

சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள் இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம். கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள், விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.


தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.