அறநிலையத்துறையின் சார்பில் ரூ.30.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆணையர் அலுவலக கூடுதல் கட்டடம்!!

 
ttn

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ரூ.30.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய ஆணையர் அலுவலக கூடுதல் கட்டடம், பக்தர்கள் வரிசை வளாகம், திருமண மண்டபம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (10.05.2023) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் 30 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் வரிசை வளாகம், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர், அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயிலில் திருமண மண்டபம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

stalin

இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள 674 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், பிரசித்தி பெற்ற திருக்கோயில்களை பெருந்திட்டத்தின் மூலம் மேம்படுத்துதல், திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான 4,300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு, என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், 2021-2022ஆம் ஆண்டிற்கான இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், "ஆணையர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடம் 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்" என அறிவிக்கப்பட்டது. அதனை செயல்படுத்திடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 25.04.2022 அன்று ஆணையர் அலுவலக வளாகத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடத்திற்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

tn
இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றிலேயே இல்லாத அளவில் முதன்முறையாக ஒப்பந்த காலத்திற்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலக கூடுதல் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இந்த ஆணையர் அலுவலக கூடுதல் கட்டடமானது, மூன்று தளங்களுடன், 33,202 சதுரடி பரப்பளவில், மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான தனி அலுவலர்களின் அறைகள், தலைமைப் பொறியாளரின் அறை, இணை ஆணையர்களின் அறைகள், உதவி ஆணையர்களின் அறைகள், திருப்பணி பிரிவு, பொறியியல் பிரிவு, உணவகம், வாகனங்கள் நிறுத்துமிடம், மின்தூக்கி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 13 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில், திருக்கோயில் வரிசை வளாகத்தில் 4 நுழைவு மண்டபங்கள், 4 அவரசகால வழிகள், காத்திருப்பு கூடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பறைகள், திருக்கோயில் பயன்பாட்டிற்கான கடைகள், மருத்துவ மையம், கட்டண சீட்டு விற்பனை மையம், பிரசாத விற்பனை நிலையம், பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் கிரானைட் கற்களால் ஆன இருக்கைகள், எஸ்.எஸ். தடுப்புகள், கண்கவர் விளக்குகள், மின் விசிறிகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வரிசை வளாகம்; விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர், அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயிலில் 1 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் ஆகியவற்றை  தமிழ்நாடு முதலமைச்சர்  இன்று திறந்து வைத்தார்.