ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம்..!!

 
ADGP Jayaram ADGP Jayaram

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் தனுஷ், தேனியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞர் தனுஷின் சகோதரரை  புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ-வுமான ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது.  இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து தலைமறைவான ஜெகன்மூர்த்தி, முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி வேல்முருகன் நேற்று விசாரித்தார். அப்போது இந்த வழக்கை பொறுத்தவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  இந்த சம்பவத்தில் காவல்துறை ஏடிஜிபி ஜெயராமனுக்கும் தொடர்பு இருப்பதாகவும்  காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் தாமோதரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஏடிஜிபி ஜெயராமின்  வாகனம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். இதனையடுத்து, ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADGP Jayaram

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து ஏடிஜிபி ஜெயராம் நேற்று கைது செய்யப்பட்டார்.  ஆள் கடத்தல், குற்றச்செயலில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருத்தணியை அடுத்த திருவாலங்காடு டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து ஏடிஜிபி ஜெயராமிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டுள்ளனர். 12 மணி நேரத்திற்கும்  மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், மேலும், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக அரசு அதிகாரி கைது செய்யப்பட்டால் 24 மணி நேரத்திற்குள்ளாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் ஏடிஜிபி ஜெயராமை சபெண்ட் செய்ய தமிழக அரசின் உள்துறை செயலகத்திற்கு , தமிழ்நாடு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.  இந்த பரிந்துரையை ஏற்று ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.