விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு முதல்வர் வீட்டில் காத்திருக்கும் நிர்வாகிகள்
விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து, ஆதவ் அர்ஜூனா, முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் ஆகியோர் முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு சென்று காத்திருக்கின்றனர்.

தவெக தலைவர் விஜய், கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ரோடு ஷோவுக்கு விதிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. தமிழக அரசும் விதிமுறைகளை வகுத்து கோர்ட்டில் சமர்பித்துள்ளது. இவ்வழக்கில் ஐகோர்ட் இறுதி தீர்ப்பு வழங்காததால் நிலுவையில் உள்ளது. இதனால் சமீபத்தில் தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரத்தில் உள் அரங்கில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இருப்பினும், தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் புதுவையில் வரும் 5ம் தேதி விஜய் ரோடு ஷோ நடத்த தவெக சார்பில் போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி புதுவை காவல்துறை ரோடு ஷோ நடத்த அனுமதி மறுத்துள்ளது. இருப்பினும் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து, முதல்அமைச்சர் ரங்கசாமி, காவல்துறை அதிகாரிகளை 3 முறை சந்தித்து தங்களுக்கு அனுமதி வழங்கும்படி வலியுறுத்தி வந்தார்.
இதையடுத்து புதுவை காவல்துறை, ரோடு ஷோவுக்கு பதிலாக பொதுக்கூட்டம் நடத்தினால் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து உப்பளம் துறைமுக வளாகத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தரும்படி தவெக தரப்பில் கோரப்பட்டது. தற்போது கடலுார் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. உப்பளம் மைதானம் செல்லும் பாதை மிகவும் குறுகலானது. விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க புதுவை மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் திரள்வார்கள். இதனால் புதுவையில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். எனவே லாஸ்பேட்டை ஹெலிபேட் விமான தளத்தில் பொதுக்கூட்டம் நடத்தும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதோடு, தமிழக பகுதிகளிலிருந்து தொண்டர்கள் வருவதை தவிர்க்க தவெக தலைமை அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். ஆனாலும் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஒருவேளை விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க விரும்பினாலும், காலாப்பட்டில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு பிரச்சார வாகனத்தில் சென்றால் கடும் நெரிசல் ஏற்படும். இதனால் நேரடியாக விமானம் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பும்படியும் போலீசார் கூறியுள்ளனர். இந்த நிலையில் 4வது முறையாக இன்று பிற்பகல் 11.35 மணியளவில் மறைமலை அடிகள் சாலையில் உள்ள சீனியர் சூப்பிரெண்டு அலுவலகத்துக்கு தவெக பொதுச்செயலாளர்கள் புஸ்சி ஆனந்து, ஆதவ் அர்ஜூனா, முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் ஆகியோர் வந்தனர். ஆனால் எஸ்எஸ்பி கலைவாணன், போலீஸ் தலைமையகத்துக்கு சென்றுவிட்டார். இந்த தகவலை அங்கிருந்த போலீசார் தெரிவித்தனர். இதனால் அவர்கள் யாரையும் சந்திக்காமல் மீண்டும் காரில் ஏறி திரும்பி சென்றனர். தொடர்ந்து அவர்கள் கோரிமேட்டில் உள்ள முதல் அமைச்சர் வீட்டுக்கு சென்றனர். அங்கு முதல் அமைச்சர் இல்லாததால் அவர் வருகைக்காக காத்திருக்கின்றனர்.


