கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

 
admk office admk office

வட சென்னையை விஷ நகரமாக்கும் கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி , வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ் நாட்டில் ஒரு அலங்கோல ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் மக்கள் பல்வேறு வகைகளில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழலை இந்த அரசு ஏற்படுத்தவில்லை. தற்போதைய அரசு முற்றிலும் செயலிழந்த அரசாக விளங்கி வருகிறது. அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியில், மக்கள் நலன் கருதி கொண்டுவரப்பட்ட பல்வேறு முத்தான திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த விடியா திமுக அரசு முடக்கியும், நீர்த்துப்போகவும் செய்து வருவது, வேதனைக்குரிய விஷயமாகும். அந்த வகையில், வட சென்னை மாவட்டம், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விடியா திமுக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் அலட்சியப் போக்கு மற்றும் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, பல்வேறு வகைகளில் சிரமத்தை சந்தித்து வருவதாக, அப்பகுதிவாழ் மக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.  

அதன் விபரம்:  பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, கொடுங்கையூர், 37-ஆவது வட்டத்தில் உள்ள குப்பை கொட்டும் வளாகத்தில், சுமார் 6 கோடி ரூபாய் செலவில் இந்து, கிறிஸ்தவர் மற்றும் முகமதியருக்கு மயான பூமி அமைப்பதற்காக இடம் ஒதுக்கி பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டு காலமாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் இப்பணியை தொடர்ந்து மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது. கழக ஆட்சிக் காலத்தில், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், மணலி சாலையில் உள்ள ரயில்வே கிராசிங் LC1 மற்றும் LC2 ஆகிய இரண்டிற்கும் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு சுமார் 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், விடியா திமுக அரசு பதவியேற்றவுடன், இப்பணியை நிறுத்திவிட்டு, LC1, LC2 ஆகிய இரண்டிற்கும் தனித் தனியாக பாலம் கட்டுவதாக அறிவித்து, மணலி சாலையில் உள்ள மேம்பாலத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டி வருகின்றனர். இதுநாள்வரை எந்தப் பணியும் முழுமையாக நடைபெறவில்லை. இதன் காரணமாக, இங்கு வாழும் மக்கள் சுமார் 6 கி.மீ. சுற்றிக்கொண்டு பணிக்கு செல்ல வேண்டி இருக்கிறது. அதேபோல், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும், மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் மிகுந்த சிரமப்பட வேண்டி உள்ளது.  கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பையோமைனிங் முறையில் குப்பை கொட்டும் வளாகத்தை மீட்டெடுத்து பழைய நிலைக்குக் கொண்டுவருவதாகக் கூறி, சுமார் 660 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, குப்பை கொட்டும் வளாகத்தில் உள்ள குப்பைகளை எரிஉலை மூலம் எரித்து சாம்பலாக்குகின்றனர். இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி, அங்கு வாழும் மக்களும், அவ்வழியே பயணம் செய்யும் பொதுமக்களும் மிகுந்த அவதிப்படுவதோடு, சுவாச நோய், தோல் அரிப்பு உள்ளிட்ட நோய்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சென்னை மாநகர மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல், குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்நிலையில், கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்கியும், நீர்த்துப்போகவும் செய்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும்; மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, பெரம்பூர் தொகுதி, கொடுங்கையூரில் மயான பூமி அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கி விரைந்து முடித்திடவும்; டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், மணலி சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்திடவும்; வட சென்னையை விஷ நகரமாக்கும் கொடுங்கையூர் எரிஉலை திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தின் சார்பில், 2.6.2025 திங்கட் கிழமை காலை 10 மணியளவில், சென்னை மாநகராட்சி, மண்டலம் - 4க்கு எதிரில் அமைந்துள்ள தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி பா. வளர்மதி அவர்கள் தலைமையிலும்; வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு. R.S. ராஜேஷ் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும். 
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், சென்னை மாநகராட்சி மாமன்ற முன்னாள் வார்டு உறுப்பினர்களும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 
நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.