“அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் கஞ்சா ஒழிக்கப்படும்”- இபிஎஸ்
அதிமுக ஆட்சி மலர்ந்தால் மூன்றே மாதங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா முழுமையாக அகற்றப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சிவகாசியில் பரப்புரையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “எங்கு பார்த்தாலும் மாத்திரை, சாக்லேட், திரவ வடிவங்களில் கஞ்சா கிடைக்கிறது. ஆளும் கட்சிக்கு துணை நிற்பவர்கள் தான் பெரும்பாலும் கஞ்சா விற்கின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 3 மாதங்களில் எங்கும் கஞ்சா இல்லாமல் ஒழிக்கப்படும். திமுக அரசு அளித்த வாக்குறுதிகளில் 4ல் ஒரு பங்கை கூட நிறைவேற்றவில்லை. ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக மீண்டும் வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் நாடு வளர்ச்சி அடையும், திமுகவுக்கு அதுபற்றி கவலை இல்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம், ஒழுங்கு நிரந்தர டிஜிபியை நியமிக்க முடியாத அரசாக இது உள்ளது. பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது மத்திய அரசுடன் பேசி தீர்வு கண்டோம்.
காவிரி குண்டாறு இணைப்புத்திட்டத்தை திமுக அரசு முடக்கியது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். சிவகாசியின் வாழ்வாதாரமான பட்டாசு தொழிலை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தது அதிமுக ஆட்சிதான். ஊழல் செய்வதில் தி.மு.க அரசு முதலிடம். 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நிதி நிலைமை சரியாக இருந்தது. கொரோனா காலத்தில் ஒரு ரூபாய் வரி வருவாய் இல்லாமல் ஆட்சி செய்தோம்” என்றார்.

