விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஏன்? - எடப்பாடி பழனிசாமி பதில்
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தும். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அது போல விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடைபெற வாய்ப்பு உள்ளது. சுதந்திரமாக தேர்தல் நடக்காது என்பதால்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது.

தேர்தல் ஆணையம், அதிகாரிகள், காவல்துறையினர் திமுகவுக்கு துணையாக இருக்கிறார்கள். பூத் வாரியாக பிரித்து பண மழை பொழிந்து ஜனநாயக படுகொலை நடைபெறும். தேர்தலை கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அதிமுக அல்ல. மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அதிமுக, 2026 சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவோடு மீண்டும் ஆட்சி அமைக்கும்” எனக் குற்றம் சாட்டினார்.


