கலைஞர் நாணயத்தில் இந்தி... திமுக இரட்டை வேடம் போடுகிறது- எடப்பாடி பழனிசாமி
திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு இருப்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆக.15ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக கலந்து கொள்ளாது என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்தார். ஆனால் ஆளுநரின் விருந்தில் திமுக தலைவர், பொதுச்செயலாளர் இருவரும் கலந்து கொண்டனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் நாங்கள் கலந்து கொள்கிறோம், நீங்களும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சொன்ன உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். கலைஞர் நினைவு நாணயத்தில் இந்தி இடம்பெற்றுள்ளதற்கு திமுக உடன்படுகிறது. இதன்மூலம் திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு இருப்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும் என்பது திமுகவின் விருப்பம். ரூ.100 நாணயம் வெளியிட வேண்டும் என நினைப்பது திமுகவின் விருப்பம். ஆனால் வெளியிடுவது யார் என்பது தான் கேள்வி ? ஏன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை அழைத்து ரூ.100 நாணயத்தை வெளியிட்டு இருக்கலாமே! கலைஞர் நாணய விழாவிற்கு ராகுலை அழைக்காதது ஏன்? நாங்கள் பாஜக அணியில் இருந்தபோது கூட, பாஜக தலைவர்களை அழைத்து விழா நடத்தவில்லை. சென்னையில் கருணாநிதி சிலையை வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். காவிரி பிரச்சனைக்காக அதிமுக எம்பிக்கள் 37 பேர் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள். தற்போதுள்ள 40 திமுக எம்பிக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.