"நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்" - ஈபிஎஸ்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை வெளியிட்டார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி, நான் தான் முதலமைச்சர் வேட்பாளர். எங்களுடன் கூட்டணியில் உள்ளவர்களை தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்துக்கு அழைத்துள்ளேன். நான் எப்போதும் மக்களுடன் தான் பயணிக்கிறேன். எனது சுற்றுப்பயணம் மூலம் அதிமுக மிகப்பெரிய மக்கள் ஆதரவை பெற்று மாற்றத்தை ஏற்படுத்தும். 234 தொகுதிகளிலும் மக்களை சந்தித்து திமுக அரசு நிறைவேற்ற தவறிய வாக்குறுதிகள் குறித்து விளக்குவேன். தேமுதிக எங்களுடன் கூட்டணியில் உள்ளதா என்பதை ஜனவரி மாதம் அறிவிப்பதாக கூறியுள்ளனர். யாரெல்லாம் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றவேண்டுமென நினைக்கிறார்களோ அவர்களுடனே எங்கள் கூட்டணி. அவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
திருபுவனத்தில் போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்ட அஜித்குமாருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். அஜித்குமார் மரணத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதை சிபிஐ வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். திமுகவை வேரோடு அழிக்க வேண்டுமென தொடங்கப்பட்ட கட்சிதான் அதிமுக. திமுக ஆட்சியை அகற்றவே சுற்றுப்பயணம் செல்கிறேன். ஜூலை 7 அன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறேன்” என்றார்.


