அதிமுகவில் குடும்ப அரசியலா? செங்கோட்டையன் குற்றச்சாட்டுக்கு ஈபிஎஸ் விளக்கம்
வேறு குற்றச்சாட்டு இல்லாததால் அதிமுகவில் குடும்ப அரசியல் இருக்கிறது என செங்கோட்டையன் கூறுவதாக பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, “SIR வந்துவிட்டால் தேர்தலில் கள்ள ஓட்டு போட முடியாது என்பதால் SIR வந்தால் மக்களுக்கு வாக்களிக்கக் கூடிய உரிமையே போய்விடும் என்ற அவதூறு செய்தியை திமுகவினர் பரப்புகின்றனர். SIR கணக்கீட்டு படிவங்களை அனைத்து வீடுகளுக்கும் வழங்க 8 நாட்களே போதும், எஸ்ஐஆர் விவகாரத்தில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பில்லை. SIR என்றாலே திமுக அலறுகிறது, பதறுகிறது. முறைகேடாக இருக்கும் வாக்காளர்களை விடுவித்து தகுதியானவர்கள் இடம்பெற வேண்டும் என SIR வாக்காளர் சிறப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியை திமுகவால் குறை சொல்ல முடியாததால் பாஜகவுடனான கூட்டணியை விமர்சிக்கின்றனர். வேறு குற்றச்சாட்டு இல்லாததால் அதிமுகவில் குடும்ப அரசியல் இருக்கிறது என செங்கோட்டையன் கூறுகிறார். எனது மகனை யாராவது கட்சி நிகழ்ச்சியில் பார்த்துள்ளீர்களா?திமுக ஆட்சியில், 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக திமுக அமைச்சரே தெரிவித்திருக்கிறார். திமுக Vs த.வெ.க இடையே மட்டும்தான் போட்டி என விஜய் கூறியது அவரது கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த மட்டுமே. எங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என உள்துறை அமைச்சர் அமித்ஷாவே அறிவித்துவிட்டார். முதல்வர் வேட்பாளரும் அதிமுகவை சேர்ந்தவர்தான் என்பதை அமித்ஷா உறுதி செய்துவிட்டார்” என்றார்.


