'தில்லுமுல்லு செய்து தேர்தலில் திமுக வெற்றி' - ஈபிஎஸ் கடும் தாக்கு!!

 
eps

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது ராயபுரம் வார்டில் கள்ள ஓட்டு போட முயன்றதிமுக பிரமுகர் ஒருவரை அடித்து அரை நிர்வாணமாக்கி இழுத்து வந்த புகாரில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.  அதன் பிறகு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு ,தொழிற்சாலை அபகரிப்பு என அடுத்தடுத்த வழக்குகளிலும் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார் . திமுக காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயக்குமாரை கைது செய்ததாக அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்தது. 

tn

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை, மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

tn

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசிய போது, முன்னாள் அமைச்சர் ஜனநாயக ரீதியாக செயல்பட்டதற்கு கைதுசெய்யப்பட்டுள்ளார். கள்ள ஓட்டு போட முயன்றவரை பிடித்துக் கொடுப்பது குற்றமா? தமிழ்நாட்டில் அதிமுக ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. எங்கள் மீது பொய் வழக்குப் போடுவதை திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது. திமுக கள்ள ஓட்டு போடுவதில் வல்லமை பெற்றவர்கள். வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவிற்கு தான் வாக்கு செல்வது போன்று தில்லுமுல்லு செய்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள் என்றார்.  

ops eps

தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் அதிகமான இடங்களில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு நடந்துள்ளது. திமுகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டது. தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை ஒன்றாக சேர்ந்து திமுகவை வெற்றி பெற வைத்துவிட்டது என்று கடுமையாக விமர்சித்தார்.