நேர்மையான போலீஸ் அதிகாரியை கேவலப்படுத்தலாமா? - எடப்பாடி பழனிசாமி
நேர்மையான போலீஸ் டிஎஸ்பியிடம் இருந்து ஜீப்பை பறித்து கேவலப்படுத்தலாமா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம்,சீர்காழி தேர்தல் பிரச்சாரம் செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாமல் Double Game ஆடுபவர் ஸ்டாலின. அதிமுக ஆட்சியில் டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இனி எந்த கொம்பனாலும் டெல்டா மாவட்டத்தை தொடக்கூட முடியாது. அமைச்சராக இருந்தபோது மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்தவர் இன்றைய முதல்வர் ஸ்டாலின். மீதி மீத்தேன் திட்டங்கள் மூலம் நிலங்களை பறிக்க முயற்சி செய்தவர் ஸ்டாலின்.
கொரோனா போன்ற கடினமான நிலையில் கூட விவசாயிகள் வாழ்வு மலரவும், விவசாயிகளுக்கான இடர்பாடுகள் களையவும், இந்தியாவிலேயே ரூ 12,000 கோடிக்கு பயிர் காப்பீட்டு திட்டம் அதிமுக ஆட்சியில் தான் வாங்கி கொடுத்தோம். டெல்டா மாவட்டம் திமுகவின் கோட்டை என்கிறார் ஸ்டாலின், அந்த கோட்டை எல்லாம் நொறுங்கிவிட்டது. விவசாயிகள் கடனை இருமுறை தள்ளுபடி செய்தது அதிமுக அரசுதான், அதிமுக ஆட்சியில் ரூ.2,248 கோடி விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இனி எந்தக் கொம்பனாலும் காவிரி டெல்டா மாவட்டங்களில், வேளாண் சாரா பணிகளுக்கு நிலத்தை பறிக்க முடியாது.
நான் விவசாயி என்பதால் பஸ்ஸில் தான் வர முடியும். ஸ்டாலின் அப்பா கருணாநிதி கோடீஸ்வரர் தனி விமானத்துல ஸ்டாலின் வருவார். திமுக ஆட்சியில் அரசு பஸ்கள் எல்லாம் சுந்தரா ட்ராவல் பஸ் போல டயர் தனியா கழண்டு ஓடுது. திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரே கொள்கையா? திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் என்ன சாதனைகளை கூறி வாக்குகளை பெறுவீர்கள்? 50 மாதத்தில் மக்களுக்கு என்ன புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டது, தேர்தல் வரும் போது மக்களிடத்தில் எப்படி போய் ஓட்டு கேட்க முடியும் என்று திமுக கூட்டணி கட்சிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும். திமுக அரசை அகற்ற யார் எங்களுடன் கூட்டணிக்கு வந்தாலும் நாங்கள் வரவேற்கிறோம்” என்றார்.


