“4 ஆண்டுகளில் நாலு லட்சம் கோடி கடன்! அனைத்தையும் மக்கள் மீது சுமத்திவிடுவார்கள்”- எடப்பாடி பழனிசாமி
கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொள்கை இல்லை என்பதால் அந்தக் கட்சி தேய்ந்து கொண்டிருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ராஜப்பாளையம் சட்டமன்ற தொகுதி மக்கள் மத்தியில் உரையாற்றுகையில், “ஒவ்வொரு தேர்தலில் வெற்றி, தோல்வி நிர்ணயம் செய்வது மக்கள். அந்த மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். கூட்டணியை நம்பி நீங்கள் இருக்கிறார்கள், ஆனால் மக்களை நம்பி நாங்கள் இருக்கிறோம். 2011 முதல் 2021 வரை அதிமுக சிறப்பான ஆட்சி கொடுத்தது. தமிழ்நாட்டில் எந்த மூலை முடுக்கிற்கு சென்றாலும், அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்கள் சொல்கிறார்கள். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டுவந்து மக்களின் அன்பைப் பெற்ற கட்சி அதிமுக.
திமுக ஆட்சி பொறுப்பேற்று 50 மாத காலத்தில் ஒரு முறையாவது திமுகவை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை விட்டது என வரலாறு உண்டா? எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொள்கை இல்லை என்பதால் அந்தக் கட்சி தேய்ந்து கொண்டிருக்கிறது. திமுக செய்கின்ற தவறுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி பலிகடா ஆகாதீர்கள். அவர்கள் செய்கின்ற தவறை நீங்கள் சுமக்காதீர்கள். தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் உங்கள் கட்சி அடையாளம் தெரியாமல் போய்விடும். திமுக 4 ஆண்டுகளில் நான்கு லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளதாக நிதி மேலாண்மை குழு அறிவித்துள்ளது. இந்த ஒரு ஆண்டில் ஒரு லட்சம் கோடி கடன் பெற்றுவிடுவார். ஆக மொத்தம் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடனையும் மக்கள் மீது சுமத்திவிடுவார்கள். அதிமுக ஆட்சியில் எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2,500 கொடுதோம். ஏழை மக்களுக்கு பொங்கல் தொகுப்பு கொடுப்பதிலும் ஊழல் செய்த கட்சி திமுக” எனக் குற்றஞ்சாட்டினார்.


