தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதே பாமகவின் வாடிக்கை - ஈபிஎஸ் கடும் தாக்கு!!

 
ttn

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதே பாமகவின் வாடிக்கை என அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி,  அன்புமணி ராமதாஸின் நிறைவேறாத முதல்வர் ஆசை என பாமகவுக்கு கடும் நெருக்கடியான காலகட்டம் இது என சொல்லலாம் . இதன் காரணமாகவே ஒவ்வொரு பாமக கூட்டத்திலும் ராமதாஸ் தனது ஆதங்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.  அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,  வட தமிழகத்தில் நாம் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில் இந்நேரம்  நாம் ஆட்சியை கைப்பற்றி இருக்கவேண்டும்.  ஆனால் கூட்டணி என்றால் இப்போதெல்லாம் காலை வாருவது என்று அர்த்தம் ஆகிவிட்டது. கூட்டணி தர்மம் அதர்மம் ஆகிவிட்டது .23 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் வெறும் 5 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். வன்னியர்களின் வாக்கு எங்கே போனது? தமிழகத்தில் மாற்றம் கொண்டு வருவேன் என்று அன்புமணியை நீங்கள் வெற்றிபெற செய்யவில்லை என்று அதிமுகவை விமர்சித்து பேசினார். 

eps

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், "திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை மறைக்கவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தி வருகிறது. அதிமுகவை நேரடியாக எதிர்க்க முடியாமல் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை நடத்துகிறது. அதிமுக உட்கட்சி தேர்தல் சுமுகமாக நடைபெறும் நிலையில் சோதனை நடைபெறுவது கண்டிக்கத்தக்கது. அதிமுகவின் செல்வாக்கு வளர்வதை திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை" என்றார்.

Ramadoss

தொடர்ந்து பேசிய அவரிடம் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகிவிட்டதாக ராமதாஸ் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, " தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதுதான் பாமகவின் வாடிக்கை.  பாமகவுக்கு அதிமுக என்ன துரோகம் செய்து விட்டது என டாக்டர் ராமதாஸ் கூற வேண்டும்.  மக்கள் ஓட்டு போடாததால் சட்டமன்ற தேர்தலில் பாமக தோல்வி அடைந்தது . கூட்டணியிலிருந்து விலகியதாக பாமக அறிவித்துவிட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பாமக தனித்துப் போட்டியிடும் என ராமதாஸ் அறிவித்துள்ளார் " என்று சாடினார்.