“ஸ்டாலின் பெண்களின் கனவை சிதைத்து விட்டார்! யாரும் திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க”- எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் அதிகமான திட்டங்களை பெற்ற மாவட்டம் என்ற சிறப்பு எப்பொழுதுமே நாமக்கல் மாவட்டத்திற்கு உண்டு. மண்டையை பிளக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்திருக்கும் உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்..! எவ்வளவு வெயில் அடித்தாலும் எதிரியை வீழ்த்துவது தான் நமது லட்சியம். ரேசன் கடைகளில் விலையில்லா பருப்பு, எண்ணெய் வழங்கப்படும், அதிமுக ஆட்சி அமைந்ததும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். ஸ்டாலின் தோற்கவில்லை. தமிழ்நாட்டு மக்களை தோற்கடித்துவிட்டார். பெண்களின் கனவை சிதைத்து விட்டார். இதற்கு பெண்கள் தேர்தலில் திமுகவிற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த திமுகவுக்கு பெண்கள் ஓட்டுப்போட கூடாது. குமாரப்பாளையம் பகுதியில் குடும்ப வறுமையை காட்டி பண ஆசையை தூண்டி திமுகவினர் கிட்னி முறைகேடு நடத்தியுள்ளனர். இதற்கு தேர்தலில் நீங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். பெண்கள் பாலியல் சீண்டலில் பாதிக்கப்படும் போது அப்பா என்ற குரல் உங்கள் காதில் விழவில்லையா? அப்பொழுது அப்பா எங்கே போனீர்கள்?
தமிழ்நாட்டில் வறுமை இல்லை என ஸ்டாலின் சொல்வது பொய். வறுமை காரணமாகவே கந்துவட்டிக்கு கடன் வாங்குகிறார்கள். கிட்னி விற்கும் நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. போதைப்பொருள், கஞ்சா விற்பனையை திமுக ஆட்சியில் தடுக்க முடியாத நிலை உள்ளது. காவல்துறை மீது பயமில்லாததால் கொலை, கொள்ளைகள் நடக்கின்றன. மக்களின் கிட்னியை திருடிய மருத்துவமனை நிர்வாகம் மீது அதிமுக ஆட்சி அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


