“விஜய் கூறுவதை நாங்கள் ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை”- எடப்பாடி பழனிசாமி
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தின் போது அதிமுகவுக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருப்பதை பார்க்க முடிந்தது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும். திமுக- தவெகவிற்குதான் போட்டியே என விஜய் கூறுவதை நாங்கள் ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை. தவெகவுடன் எந்த SoftCornor-ம் இல்லை. அவர்களுக்கு இரு பிரச்சனை வந்தபோது மனிதாபமான அடிப்படையில் நடந்து கொண்டோம் அவ்வளவுதான். கூட்டணி ஆட்சியா, தனி ஆட்சியா என்ற குழப்பம் திமுக கூட்டணியில் இருக்கிறது. ஆனால் அதிமுக கூட்டணி தெளிவாக இருக்கிறது. கூட்டணி ஆட்சி என்ற பேச்சே எழவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினின் அப்பா முதலமைச்சராக இருந்தார், அவருக்கு விளம்பரம் எளிதாக கிடைத்தது மற்றும் அரசியல் அதிகாரமும் பணபலமும் இருந்தது. நான் விவசாயியாக இருந்து படிப்படியாக உழைப்பால் பொதுச்செயலாளர் வரை உயர்ந்துள்ளேன். முதலமைச்சர் ஸ்டாலின் வந்த வழி வேறு, நான் வந்த வழி வேறு.
நடிகர் விஜய் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்தால் தான் கட்சியே நடத்த முடியும். திரையில் தான் விஜய் சூப்பர் ஸ்டார், அரசியலில் விஜய் கேள்விக்குறி. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிக வலிமையாக உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக வெற்றி வாகை சூடும். நாங்கள் கூட்டணி அமைத்தால் அடிமை என்கிறார்கள். திமுகதான் காங்கிரசின் அடிமை. தவெக ஒரு தேர்தலைக் கூட சந்திக்கவில்லை, பிறகு வாக்கு சதவீதத்தை எப்படி கணிப்பது..? தேர்தலை சந்தித்தால்தான் அவர்களுக்கு எவ்வளவு வாக்கு உள்ளது என கணிக்க முடியும். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தின் போது அதிமுகவுக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருப்பதை பார்க்க முடிந்தது” என்றார்.

