“நாடாளுமன்றத்திற்கு திமுக எம்பிக்கள் மாடு மேய்க்க போறாங்களா?”
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுக எம்பிக்கள் பிரதமரை முற்றுகையிட்டிருந்தால் திமுக எம்பி-க்களுக்கு நான் சல்யூட் அடித்திருப்பேன் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் அதிமுக செயல் வீரர்கள் பங்கேற்ற கூட்டம், உறுப்பினர்களின் உரிமைஅட்டை வழங்கும்விழா மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “தமிழக வெள்ள பாதிப்புக்கு, மதுரை எய்ம்ஸ் மற்றும் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதை கண்டித்து, திமுக எம்பிக்கள் பிரதமரை முற்றுகையிட்டிருந்தால் நான் அவர்களுக்கு சல்யூட் அடித்து இருப்பேன். அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத பட்ஜெட்டே இல்லை. ஜெயலலிதா இருந்தபோது 2016-ல் தமிழகம் புறக்கணிக்கப்பட்ட நிலையில் 39- எம்பிக்களால் டெல்லியை பதற வைத்தோம்.
தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத பட்ஜெட் நகலை 40 எம்பிக்களும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமிருந்து பிடுங்கியிருக்க வேண்டும். மக்களுக்காக நாடாளுமன்றத்தில் வாதாடாமல் எம்பிக்கள் என்ன மாடு மேய்க்க சென்றீர்களா? தமிழக மக்களுக்காக மக்களவையில் வாதாடாமல் டெல்லிக்குச் சென்று போண்டா சாப்பிட்டு டெல்லி எருமை பாலை காய்ச்சி குடித்துவிட்டு தமிழகத்துக்கு வந்து தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக சொல்வதற்காகவா மக்கள் வாக்களித்தார்கள்? டீ குடிப்பதற்காகவே டெல்லிக்கு எம்பிக்கள் செல்கின்றனர்” என குற்றம் சாட்டினார்.