ஆளே இல்லாத கட்சி பாஜக... ஓட்டு போட்ட மக்களுக்கு நாமம் போட்ட திமுக- ராஜேந்திர பாலாஜி
வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியா? ஸ்டாலினா? என்றால் அதிமுக தான் ஜெயிக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சிவகாசி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நடந்த செயல் வீரர்கள் வீராங்கனைகளின் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “அதிமுகவுக்கு வயது 53. திமுகவுக்கு வயது 75. காங்கிரசுக்கு 100. பிஜேபி பற்றி பேசவே வேண்டாம் அதுக்கு ஆளத் தேடி தான் பிடிக்க வேண்டும். எல்லா சமுதாய மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி வெற்றி கூட்டணியை அமைப்பார். அதிமுகவுக்கு எதிரி திமுக தான், வருகின்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்குகளை அள்ளித் தாருங்கள். ஏமாற்று, பித்தலாட்ட வேலை செய்து விளம்பரப்படுத்திக் கொள்ளும் கட்சி திமுக. அதிமுகவில் லட்சிய வேங்கைகள் உள்ளனர். பிறருக்கு உதவி செய்ய வேண்டிய உணர்வு அதிமுக தொண்டனுக்கு எப்போதும் உண்டு.
மக்களுக்கு தொண்டு செய்யாத வேலை பார்க்காத திமுக நாட்டை ஆள்வது அதிசயம்தான். பாராளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்திக்கு மக்கள் அளித்த வாக்குகளை ஸ்டாலின் தனக்கு அளித்த வாக்குகள் என நினைக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியா? ஸ்டாலினா? என்றால் அதிமுக தான் ஜெயிக்கும். ஏமாந்து ஓட்டு போட்ட மக்கள் அனைவருக்கும் நாமம் போட்டு விட்டனர். அதிமுக ஆட்சியில் எந்த விலைவாசியும் உயரவில்லை. திமுக ஆட்சியில் அனைத்து விலைவாசிகளும் கூடி விட்டது. வரும் தேர்தலில் ஸ்டாலினை கோபாலபுரம் வீட்டுக்கு அனுப்புங்கள். எடப்பாடி பழனிச்சாமியை கோட்டைக்கு அனுப்புங்கள். அதிமுக தமிழ் நாட்டை ஆளட்டும். தமிழக மக்கள் வாழட்டும். திமுக கட்சியை தடம் இல்லாமல் ஆக்க வேண்டும். தமிழக 40 எம்பி களும் டெல்லிக்கு பிளைட்ல போறது பைவ் ஸ்டார் ஹோட்டல் தங்கறது. ரெஸ்ட் எடுக்கிறது. கையெழுத்து போட்டு சம்பள படி வாங்குறது. இந்த வேலைய தான் பார்க்கிறாங்க. மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியதில் தமிழ்நாடு பெயரே இல்லை. யாராவது ஒரு எம்பி கேட்கின்றாரா? பிரதமர் மோடியை பார்த்தால் பெட்டி பாம்பாக அடங்கி விடுகின்றனர்.

நாங்கள் பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்து இருக்கிறோம் என்கின்றனர். ஆனால் நாங்கள் எதிர்த்தாலும்- ஆதரித்தாலும் நேரடியாக இருப்போம். இனவாத, மொழிவாத, மதவாதம் இல்லாத ஆட்சி தருவதாக இருந்தால் அதிமுக ஆதரிக்கும். இல்லாவிட்டால் எதிர்க்கும். குடும்பத்தை மையமாக வைத்து நடக்கும் குடும்ப ஆட்சி, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. அந்த ஆட்சியை நீக்கும் பவர் மக்களிடமும், அதிமுக நிர்வாகிகளிடம் தான் உள்ளது. நடைபெற உள்ள சட்டமன்றதேர்தல் போர்க்களத்தில் அதிமுக தொண்டர்களின் முன்னாலும்- பின்னாலும் நாங்கள் இருப்போம்” என்றார்.


