பாஜகவிடமிருந்து திடீர் அழைப்பு- டெல்லி பறந்த செங்கோட்டையன்! 35 நிமிடங்கள் பரபரப்பு பேச்சுவார்த்தை

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு சென்று வந்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பியதை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரை சந்தித்தார். அவருடன் பாஜக எம்.எல்.ஏ.நயினார் நகேந்திரனும் உடன் சென்றார். தமிழக அரசியல் களம் பற்றி அண்ணாமலை பாஜக தலைமையிடம் கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துவிட்டு வந்துள்ளார். இந்த சந்திப்பு 35 நிமிடங்கள் நடந்துள்ளது. சட்டசபை முடிந்த பின் மதுரை சென்ற செங்கோட்டையன் மதுரையிலிருந்து டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது. அண்ணாமலையும், நயினார் நாகேந்திரனும் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன், ஒரே நாளில் மீண்டும் ஊர் திரும்பியுள்ளார். பாஜக அழைப்பின் பெயரில் அவர் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு எழுந்தன. இதன்காரணமாக எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி பெயரையும் கூறாமல் இருந்தார். அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் பங்கேற்காமல் தவிர்த்தார். இந்நிலையில் செங்கோட்டையனின் இந்த திடீர் டெல்லி பயணம் அதிமுகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.