தனித்து நின்றால் நோட்டாவை கூட தாண்ட முடியாதவர் அண்ணாமலை- ஜெயக்குமார்

 
jayakumar

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. தேர்தல் வரும்போது கூட்டணி பற்றி யோசிப்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஜெயலலிதாவை அண்ணாமலை விமர்சித்தபோது, அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும், தலைமைக் கழக நிர்வாகிகளும், பொதுச்செயலாளரும் கண்டனம் தெரிவித்து, கண்டனம் தீர்மானத்தை கூட நிறைவேற்றினோம். அதன் பிறகு அண்ணாமலை திருந்திவிட்டார் என்று பார்த்தால், பாஜகவை விட, தன்னை முன்னிலை முன்னிலைப்படுத்த, இப்போது அண்ணாவை விமர்சித்துள்ளார். 

நாங்கள் தெய்வமாக வணங்கும் அண்ணாவை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தும், அப்போதும் திருந்தாமல், நேற்றைய பேட்டியில் தன்னை முன்னிலைப்படுத்த, கூட்டணி தர்மத்தை மீறி பேசியுள்ளார். இதை தன்மானம் உள்ள அதிமுக தொண்டன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டான். தகுதிக்கு மீறிய பதவியை அண்ணாமலை பெற்றுள்ளதால், சிங்கக் கூட்டமான அதிமுகவை பார்த்து, சிறுநரி அண்ணாமலை ஊளையிட்டு வருகிறார். தனியே போய் அண்ணாமலை நின்றால், நோட்டோவுக்கு கீழ் தான் வாக்கு வாங்குவார். அதுதான் உங்கள் செல்வாக்கு. பெரியாரை, ஜெயலலிதாவை, எடப்பாடியாரை பற்றி பேச உனக்கு என்ன தகுதி உள்ளது? தனக்கு வாழ்க கோஷம் போட வேண்டும் என்று அவர் எண்ணுகிறார். இதை ஒருபோதும் அதிமுக தொண்டன் ஏற்கமாட்டான். எங்க ஆளுங்க சும்மா விடமாட்டாங்க. இனி தாறுமாறாக எங்கள் ஐடி விங் பதிலடி தரும். இதை பற்றி பாஜக தலைமையிடமும் கூறிவிட்டோம். 

jayakumar

கூட்டணிக் கட்சிக்குள் இருந்துக்கொண்டு இப்படி பேசினால், எப்படி தொண்டர்கள் களத்தில் இணைந்து வேலை செய்வார்கள். உங்களை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கிறது? பாஜகவால் இங்கு காலூன்றவே முடியாது. எங்களவை வைத்து தான் உங்களுக்கு அடையாளமே கிடைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. தேர்தல் வரும்போது அதுபற்றி முடிவெடுத்துக்கொள்ளலாம். எங்கள் கூட்டணியில் பாஜக இல்லை. இதுதான் எங்கள் முடிவு. இது என் தனிப்பட்ட கருத்து இல்லை, இது கட்சியின் ஒட்டுமொத்த முடிவு. இனி அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சித்தால், கடுமையான எதிர்ப்பை சம்பாதிப்பார்" என்று தெரிவித்தார்.