“நாங்க அடிப்பது போல் அடிக்கிறோம்... நீங்க அழுவது போல் அழுகுங்கள்! இதுதான் டீலிங்”- ஜெயக்குமார் பேட்டி

 
jayakumar jayakumar

திருப்பரங்குன்றத்தில் தீபம் விவகாரத்தில் இரட்டை மனநிலை இல்லை என்றும் பொதுச் செயலாளர் இபிஎஸ் கருத்தே இறுதியானது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

கருணாநிதி திமுக பிரசாந்த் கிஷோர் திமுக ஆகிவிட்டது"- அமைச்சர் ஜெயக்குமார்  பேட்டி!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை நினைவுகூர்ந்ததோடு, ஆளும் தி.மு.க. அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை குறித்துச் ஜெயக்குமாரின் நிலைப்பாடும் இபிஸ் கருத்தும் வேறுபாடாக இருந்ததாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு இயக்கம். எல்லோரும் சமம் என்பதே எங்கள் கொள்கை. அதேசமயம், கோயில்களில் காலங்காலமாக என்ன மரபுகள் (ஆகம விதிகள்) பின்பற்றப்படுகிறதோ, அந்த நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், இது குறித்து மேலும் கருத்து கூற இயலாது, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் விரிவாக இந்த கருத்து குறித்து தான் பேசியுள்ளார் என்று விளக்கமளித்தார். மேலும் இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதால் ஜெயக்குமார் வெட்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்தது குறித்துக் கேட்டபோது, நாங்கள் யாருடைய காலிலும், விழவில்லை. தி.மு.க. தான் டெல்லிக்குச் சென்று பா.ஜ.க.வின் காலில் விழுந்து கிடக்கிறது. தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் இடையே இப்போதும் ஒரு மறைமுக உறவு, எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ.க.விற்கான முழு ஆதரவை தி.மு.க. நிச்சயம் வழங்கும் என்று ஆரூடம் கூறினார்.

தி.மு.க.வின் இரட்டை வேடத்தை விவரிக்க, நடிகர் கவுண்டமணியின் திரைப்பட நகைச்சுவைக் காட்சி ஒன்றை ஜெயக்குமார் உதாரணமாகக் கூறினார். ஒரு படத்தில் தியேட்டர் லைசென்ஸ் வாங்குவதற்காக, அதிகாரி முன்னாள் கலெக்டரா இருந்தாலும் விடமாட்டேன்' என்று வெளியே வீரவசனம் பேசுவார் கவுண்டமணி. ஆனால், உள்ளே சென்றதும் அதிகாரியின் காலில் டமார் என்று விழுந்து, 'ஐயா எப்படியாவது லைசென்ஸ் கொடுத்துடுங்க' என்று கெஞ்சுவார். அதுபோலத்தான் தி.மு.க.வும் செயல்படுகிறது. 'நாங்கள் அடிப்பது போல் அடிக்கிறோம்; நீங்கள் அழுவது போல் அழுகுங்கள்' என்பதுதான் தி.மு.க. - பா.ஜ.க. இடையிலான டீலிங். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது தி.மு.க.வின் வழக்கம்; அ.தி.மு.க.வினருக்கு அந்தப் பழக்கம் கிடையாது, என்று குறிப்பிட்டார். தொடர்ந்து கூட்டணி கட்சியான பாஜக மறைமுகமாக திமுகவோடு கூட்டணி வைத்திருப்பதாக பகிரங்கமாக தெரிவிக்கிறீர்களே என்ற கேள்விக்கு, நான் பாஜகவை விமர்சிக்கவில்லை, திமுகவை தான் இவ்வாறு குறிப்பிடுகிறேன் என மழுப்பலாக தெரிவித்துக் புறப்பட்டு சென்றார்.