“அரண்மனை நாயே, அடக்கடா வாயை..”- ரகுபதி, ஆர்.எஸ்.பாரதி, செல்வப்பெருந்தகையை வறுத்தெடுத்த ஜெயகுமார்

 
jayakumar jayakumar

திமுக தலைமையிடம் நன்மதிப்பைப் பெறவேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் சென்று பிழைக்கக்கூடிய இந்த நாலாந்தரப் பேர்வழிகளின் தனிமனித செயல்பாடுகள் பற்றி எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

jayakumar

இதுதொடர்பாக ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசியல் களத்தில், அரசியல்வாதிகள் என்ற போர்வையில் ஒருசில கொத்தடிமைகள் அலைகின்றன. அதில் தலையாய கொத்தடிமைகளாக திமுக-வின் வாய்தா வக்கீல் ஆலந்தூர் பாரதியும், ஆதாயம்தேடி மந்திரி திருமயம் எஸ். ரகுபதியும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வபெருந்தொகையும் திகழ்கின்றனர். திமுக தலைமையிடம் நன்மதிப்பைப் பெறவேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் சென்று பிழைக்கக்கூடிய இந்த நாலாந்தரப் பேர்வழிகளின் தனிமனித செயல்பாடுகள் பற்றி எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

‘நக்குகிற மாட்டுக்கு செக்கும் கிடையாது, வழுக்கு மரமும் கிடையாது, எண்ணை வழியும் இடத்திலெல்லாம் நக்கிக்கொண்டு அலையும்’ என்ற கிராமப் பழமொழியை மெய்ப்பிப்பதுபோல, எங்கள் கழகப் பொதுச் செயலாளர் ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடியார் அவர்கள் மீது வசைபாடுவதையே தொழிலாகக் கொண்டு இந்த மூன்று அடிவருடிகளும் அலைகின்றனர். நேற்றைய (10.12.2025) தினம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்புமிக்க செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசியல் வியூகங்கள் குறித்தும், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை அண்ணன் எடப்பாடியார் அவர்கள் தலைமையில் எதிர்கொள்வது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், விடியா திமுக அரசின் அவலங்களையும், கையாலாகாத்தனத்தையும், ஊழல்களையும், சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டையும், வீம்புக்காக சுயநலத்திற்காக மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து, தமிழகத்திற்கு வரவேண்டிய பல நல்ல திட்டங்களை நாசப்படுத்தி வரும் விடியா திமுக அரசைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

rs bharathi jayakumar

இந்தத் தீர்மானங்கள் மக்கள் மத்தியில் சென்றடையும்போது, பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சியின் மீது, மேலும் மேலும் மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் என்பதை உணர்ந்த ஸ்டாலினின் பாதம் தாங்கிகளான இந்த மூவரும் ‘புரட்சித் தமிழர்’ மீது தனி மனிதத் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். அடுத்தவர் வீட்டை எட்டிப் பார்ப்பது, சமயம் கிடைக்கும்போது உள்ளே நுழையலாமா? அல்லது உள்ளிருப்பவர்களை ஈர்த்துக்கொள்ளலாமா ? என்ற எண்ணத்துடனேயே நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு அலையும் இந்த அற்ப பதர்களின் எண்ணம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடம் எடுபடாது. நெல்லின் ஈரப் பதத்தை அதிகரிப்பதற்காக இந்த ஆட்சியாளர்கள் எந்தவொரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை என்பதையும், 2021 தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கடந்த 55 மாதங்களாக நிறைவேற்றவில்லை என்பதையும், அந்நிய முதலீடுகளும், தொழில்களும் பெருமளவில் வந்துவிட்டது என்ற இந்த அரசின் பொய்ப் பிரச்சாரத்தையும், எங்களது கழகப் பொதுக்குழு தீர்மானங்கள் தோலுரித்துக் காட்டின. இந்திய வரலாற்றில் இல்லாத அளவில் பல லட்சம் கோடி ரூபாயை திமுக அரசு கடனாகப் பெற்று, தமிழக மக்களை கடன்காரர்களாக ஆக்கியது பற்றியும், விரிவாக எடுத்து வைத்தோம். கடன் சுமை உயர்ந்ததற்கான காரணத்தையும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாததற்கான காரணத்தையும் விளக்குவதற்கு யோக்கியதையற்ற ஊழல் மந்திரி ரகுபதி, அனுமதிக்கப்பட்ட அளவில்தான் கடன் வாங்கி இருக்கிறோம் என்று சப்பை கட்டு கட்டுகிறார். அனுமதிக்கப்பட்ட அளவு முழுவதுமாக கடன் வாங்க வேண்டும் என்று ஏதாவது நியதி உள்ளதா?

நீட் பிரச்சனையாக இருந்தாலும், நெல்லின் ஈரப் பதம் பிரச்சனையாக இருந்தாலும், கோவை-மதுரை மெட்ரோ ரயில் அமைக்கும் பிரச்சனையாக இருந்தாலும், திமுக அரசைக் கண்டிப்பதற்கு பதிலாக, பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் டெல்லியில் பேசி இவைகளைத் தீர்க்க ஏன் முயற்சிக்கவில்லை என்று மக்கு மந்திரி ரகுபதி கேட்கிறார். ஆட்சியில் இருப்பது இந்த மே(ல்)தாவிகள். தங்கள் மீதுள்ள வழக்குகளின் வீரியத்தைக் குறைக்க சந்து பொந்துகளில் புகுந்து டெல்லிக்கு காவடி எடுத்து மறைமுகமாக அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துக்கொண்டிருக்கும் இவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக ஏன் போராடுவதில்லை. எங்கள் கழகப் பொதுச் செயலாளர் ‘புரட்சித் தமிழர்’தான் இதையெல்லாம் செய்ய வேண்டுமென்று சொன்னால், இந்த அரசு உடனடியாக ராஜினமா செய்யட்டும்; எடப்பாடியார் நிறைவேற்றிக்காட்டுவார். ஏற்கெனவே 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் நிலுவைத் தொகை மற்றும் ஜி.எஸ்.டி. மாநிலப் பங்குத் தொகையை விடுவிக்கவில்லை என்று கையாலாகாத முதலமைச்சர் ஸ்டாலின் புலம்பி வந்த நிலையில், எங்கள் ‘புரட்சித் தமிழர்’தான் மத்திய அரசோடு பேசி அந்த நிதிகளை விடுவிக்கச் செய்தார்.  அறிவாலய அழகேசனின் அரண்மனையில் கொலு பொம்மைகளாக இருந்துகொண்டு, வெந்ததைத் தின்று வாயில் வந்ததைக் கக்கிக்கொண்டு அலையும் மூவருக்கும், உங்களின் மூதாதையர் மு. கருணாநிதியின் வசனம் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

‘அரண்மனை நாயே, அடக்கடா வாயை,
இல்லையென்றால் அடக்கப்படுவாய்” எனக் குறிப்பிட்டுள்ளார்.